/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரந்துார் விமான நிலைய திட்டம் தாமதம் அடக்கி வாசிப்பு : தேர்தல் வரை ஒத்திவைக்க அரசு முடிவு
/
பரந்துார் விமான நிலைய திட்டம் தாமதம் அடக்கி வாசிப்பு : தேர்தல் வரை ஒத்திவைக்க அரசு முடிவு
பரந்துார் விமான நிலைய திட்டம் தாமதம் அடக்கி வாசிப்பு : தேர்தல் வரை ஒத்திவைக்க அரசு முடிவு
பரந்துார் விமான நிலைய திட்டம் தாமதம் அடக்கி வாசிப்பு : தேர்தல் வரை ஒத்திவைக்க அரசு முடிவு
ADDED : செப் 12, 2025 10:42 PM

சென்னை :காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசிடம் இருந்து இட அனுமதி மற்றும் கொள்கை அளவிலான ஒப்புதல் ஆகியவை கிடைத்தும், கட்டுமான பணிக்கு கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான பணிகளை துவக்குவதில் தாமதமாகிறது. இதற்கு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே இருப்பதால், பரந்துார் விமான நிலைய திட்டத்தில் அரசு அடக்கி வாசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணியர் மற்றும் சரக்கு கையாளுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, பரந்துார் , அதைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் இருந்து 5,320 ஏக்கர் பரப்பளவு நிலம் எடுக்கப்படுகிறது. இதில், தனியாரிடம் இருந்து 3,774 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன; மற்றவை அரசு துறை நிலங்கள்.
இத்திட்டத்தை, தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுத்துகிறது. தனியார் வசம் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியில், வருவாய் துறையும் ஈடுபட்டு வருகிறது.
பரந்துார் விமான நிலைய நிலையத்தின் முதற்கட்ட கட்டுமான பணிகளை, 2026 ஜனவரியில் துவக்கி, 2028ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. திட்ட செலவு, 29,150 கோடி ரூபாய்.
இத்திட்டத்திற்கான இட அனுமதியை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், 2024ல் வழங்கியது. கொள்கை அளவிலான ஒப்புதல், இந்தாண்டு ஏப்ரலில் பெறப்பட்டது.
ஒரு விமான நிலையம் அமைக்க இட அனுமதி, கொள்கை அளவிலான ஒப்புதல் மற்றும் கட்டுமான பணி முடிந்த பின் இயக்கத்திற்கு கொண்டு வருவதற்கான அனுமதி என, மூன்று வகை அனுமதிகளை பெற வேண்டும்.
பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு இரண்டு அனுமதிகளை மத்திய அரசு அளித்தும், விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' வெளியீடு தொடர்பான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
நிலம் கையகப்படுத்தும் பணியும் மந்தமாக நடக்கிறது. கடந்த இரு மாதங்களில், 441 நில உரிமையாளர்க ளிடம் இருந்து 566 ஏக்கர் நிலங்க ள் பெறப்பட்டுள்ளன. இதற்காக அவர்களுக்கு 284 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.
கையகப்படுத்தும் பணிகளை விரைவாக முடித்து, முதல் கட்ட பணிகளை வரும் ஜனவரியில் துவக்க திட்டமிட்ட அரசு, தற்போது, அடக்கி வாசிக்கிறது. இதற்கு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கேள இருப்பதே காரணம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை, சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. அதற்கு எல்லாம் அரசு கவனம் செலுத்தாமல், திட்டத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியது.
இதன் காரணமாகவே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து முக்கிய அனுமதிகள் விரைவாக கிடைத்தது.
ஆனால், விமான நிலையம் அமைவதாக அறிவிப்பு வெளியானது முதல், இத்திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் , பரந்துார் உள்ளிட்ட மக்கள், 1,000 நாட்களை கடந்தும் , தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இக்கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை செய்து வருவதால், அடுத்த ஏழு மாதங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தங்களின் ஓட்டு வங்கி பாதிக்குமோ என கலக்கமடைந்துள்ள ஆளும் தி.மு.க., அரசு, தற்போது திட்டத்தை துவக்குவதில் வேகம் காட்டினால், பிரச்னைகள் உருவாகலாம் என கருதுகிறது. எனவே, திட்ட பணிகளில் வேகத்தை குறைந்துள்ளது.
நிலத்தை முழுதுமாக கையகப்படுத்தியதும், கட்டுமான பணிக்கான அடுத்தக்கட்ட பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.