மணலி அருகே 12 மணி நேரத்தில் இருவர்.. அடுத்தடுத்து கொலை! மக்கள் அலறியடித்து ஓட்டம்
மணலி அருகே 12 மணி நேரத்தில் இருவர்.. அடுத்தடுத்து கொலை! மக்கள் அலறியடித்து ஓட்டம்
ADDED : மே 24, 2026 01:27 AM

சென்னை: சென்னை மணலியை அடுத்த மணலி புதுநகரில், 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளனர். நேற்று காலை நடந்த கொலையை பார்த்து, மக்கள் அலறி அடித்து ஓடினர். தொடர் கொலைகளால், போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, மணலிபுதுநகர் அடுத்த பழைய நாப்பாளையம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் என்ற சின்னகோனை, 27. இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் நவீன் என்ற பெரியகோனை, 29.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், இருவரும் மணலிபுதுநகர் - எம்.ஆர்.எப்., நகர் அருகே, உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்கு சென்று, முட்புதர் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், அண்ணன் - தம்பியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில், பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். நவீன், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து, மணலிபுதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய, வெள்ளிவாயல்சாவடியை சேர்ந்த எழிலரசன், 21, கொண்டக்கரையை சேர்ந்த பாரதிராஜா, 27, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.
துக்க நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே, கொலை சம்பவம் அரங்கேறியது தெரிய வந்துள்ளது. தலைமறைவான நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம் இந்த கொலை சம்பவம் நடந்து, 12 மணி நேரம் ஆவதற்குள், அடுத்த கொலை மணலி புதுநகரில் அரங்கேறியுள்ளது.
மணலிபுதுநகர் அடுத்த விச்சூர், காந்தி நகரை சேர்ந்தவர் விஜய், 25. இவர், அண்ணன் கருப்பு அஜித், 2023ம் ஆண்டு, செங்குன்றத்தில் மூவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் உள்ளார்.
அசாதாரண சூழல் இருப்பதால், விஜயும், அவரது சகோதரரும், மணலி புதுநகருக்குள் நுழைய வேண்டாம் என, போலீசார் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், விஜய் தன் பிறந்தநாளையொட்டி, விச்சூரில் உள்ள தன் சகோதரரின் குழந்தையை பார்ப்பதற்காக, நேற்று காலை 8:00 மணிக்கு பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது, விச்சூர் - பெருமாள் கோவில் தெரு, வேகத்தடை அருகே சென்று கொண்டிருந்தபோது, பைக்கின் வேகம் குறைவதை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர், வீடு ஒன்றில் இருந்து வெளியே வந்து, கத்தியால் விஜய் மார்பில் குத்தியுள்ளார்.
நிலைகுலைந்து சரிந்தவரை, தலை மற்றும் முகத்தில் பலமாக வெட்டி விட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த விஜய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பதறி ஓடினர். மணலிபுதுநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த விஜய் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையில் தொடர்புடைய லோகேஷ், 21, என்பவரை, நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், 2023 செப்டம்பரில், செங்குன்றம் - கண்ணம்பாளையத்தில், மூன்று பேரை வெட்டி கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான அஜித், தற்போது சிறையில் உள்ளார்.
கொலையான மூவரின் நண்பரான லோகேஷ், தன் நண்பர்களை கொலை செய்த அஜித்தை பழிக்கு பழிவாங்க திட்டமிட்டார். அஜித் சிறையில் உள்ளதால், அவரது குடும்பத்தில் யாரையாவது ஒருவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி, விச்சூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
அஜித்தின் தம்பியான விஜய் ஊருக்குள் வருவதை அறிந்த லோகேஷ், பதுங்கியிருந்து, அவரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
மணலி புதுநகரில், 12 மணி நேரத்தில், அடுத்தடுத்து இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; போலீசாரும் திக்குமுக்காடி வருகின்றனர்.
