/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கு முன் போதை பொருட்கள் விற்கின்றனர்: முன்னாள் நீதிபதி வேதனை
/
பள்ளிக்கு முன் போதை பொருட்கள் விற்கின்றனர்: முன்னாள் நீதிபதி வேதனை
பள்ளிக்கு முன் போதை பொருட்கள் விற்கின்றனர்: முன்னாள் நீதிபதி வேதனை
பள்ளிக்கு முன் போதை பொருட்கள் விற்கின்றனர்: முன்னாள் நீதிபதி வேதனை
ADDED : செப் 28, 2025 03:01 AM

சென்னை:''பள்ளிக்கு முன் மிட்டாய் விற்பது போல், போதை பொருட்கள் விற்கின்றனர். அவற்றை விற்பது தெரிந்தால், தாமதிக்காது போலீசாரை அழைக்க வேண்டும்,'' என, ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்தார்.
சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கத்தின் 130வது ஆண்டு விழாவை யொட்டி, சங்கத்தின் ஆண்டு மலர் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா, சென்னை, தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று நடந்தது.
சங்க பொதுச் செயலர் சேகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பேசியதாவது:
கடந்த 130 ஆண்டுகளாக சமுதாயத்தை நல்வழிபடுத்த வேண்டும் என்ற நோக்கோடு இச்சங்கம் செயல்படுகிறது. மதுவிலக்கு தடை சட்டம் அமலுக்கு வந்தபோது, வீட்டில் இருந்து, வெளியில் உள்ள தோட்டத்திற்கு மதுவை கொண்டு வந்தால் கூட, அதற்கும் தண்டனை இருந்தது.
மதுவை அரசு விற்கிறதே என கவலைப்படாதீர்கள். நல்லவை இருக்கும் இடத்தில் தான், தீயவையும் இருக்கும். எது தவறு என நாம் உணர வேண்டும். இதை அனைவரும் நடைமுறைப்படுத்தினால், நாட்டில் குறைந்தது 10 சதவீதமாவது மது புழக்கம் குறையும்.
பள்ளிக்கு முன் மிட்டாய் விற்பது போல், போதைப் பொருட்கள் விற்கின்றனர். அது தவறு என தெரிகிறது எனில், தாமதிக்காது போலீசாரை அழைக்க வேண்டும். மக்கள் சமூக நோக்குடன் செயல்பட்டால், நாட்டில் குற்றம், போதை குறையும் .
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், 36 பள்ளி மாணவ - மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. சங்கத்தின் சட்ட ஆலோசகர், சட்டநாதன் நன்றி கூறினார்.
முன்னதாக, கர்நாடக இசைக் கச்சேரி நடந்தது. அதில், வயலின் கலைஞர்கள் சிவராமன், குருமூர்த்தி, தவில் கலைஞர் சேகர், மோர்சிங் கலைஞர் கணேசன் திறம்பட வாசித்தனர்.