/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்
/
4 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்
ADDED : செப் 30, 2025 02:01 AM

சென்னை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு, ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் 4 லட்சம் பேர் புறப்பட்டனர்.
ஆயுத பூஜை பண்டிகை, அக்., 1ம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் புறப்பட்டு சென்றனர்.
பயணியர் வசதியை கருத்தில் கொண்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 400க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயில்கள் மூலமும் பயணியர் செல்கின்றனர்.
அத னால், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள்; கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில், வழக்கத்தைவிட பயணியர் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது.
சென்னையில் இருந்து இன்று அதிகளவில் செல்வர் என்பதால், கூடுதல் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறையொட்டி இரண்டு நாட்களு க்கு கூடுதலாக 2,900க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம். நேற்று மாலை முதல், குடும்பத்தினருடன் பலரும் புறப்பட்டு சென்றனர்.
இன்றும் அதிகளவில் செல்வர். இதற்காக, கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம். இதுவரை, 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்று இருப்பர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலைங்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
தாம்பரம் - கூடுவாஞ்சேரிக்கு
இன்று 3 சிறப்பு ரயில் இயக்கம்
ஆயுத பூஜைக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் பயணியர், கிளாம்பாக்கத்திற்கு செல்வதற்காக, தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே, மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து இரவு 7:42 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், கூடுவாஞ்சேரிக்கு 8:03 மணிக்கு செல்லும். தாம்பரத்தில் இருந்து இரவு 7:53 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், கூடுவாஞ்சேரிக்கு இரவு 8:17க்கு செல்லும். தாம்பரத்தில் இருந்து இரவு 8:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், கூடுவாஞ்சேரிக்கு இரவு 8:30 மணிக்கு செல்லும் எனவும், வழக்கமான ரயில் சேவையும் உள்ளது. ஞாயிறு கால அட்டவணை ஆயுத பூஜை பண்டிகை, தேசிய விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சூலுார்பேட்டை, வேளச்சேரி என, அனைத்து மின்சார ரயில் தடத்திலும், ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என, சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது.