/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3,000 டன் குப்பை தேங்கி 8 மண்டலங்களில் அவதி.. தீர்வு எப்போது? பணியில் சேர்ந்தோரும் வேலைக்கு வராததால் சிக்கல்
/
3,000 டன் குப்பை தேங்கி 8 மண்டலங்களில் அவதி.. தீர்வு எப்போது? பணியில் சேர்ந்தோரும் வேலைக்கு வராததால் சிக்கல்
3,000 டன் குப்பை தேங்கி 8 மண்டலங்களில் அவதி.. தீர்வு எப்போது? பணியில் சேர்ந்தோரும் வேலைக்கு வராததால் சிக்கல்
3,000 டன் குப்பை தேங்கி 8 மண்டலங்களில் அவதி.. தீர்வு எப்போது? பணியில் சேர்ந்தோரும் வேலைக்கு வராததால் சிக்கல்
UPDATED : செப் 04, 2025 11:20 AM
ADDED : செப் 04, 2025 12:29 AM

துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பாததால், வடசென்னையின் எட்டு மண்டலங்களில், 3,000 டன் வரை குப்பை அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே, வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி நடப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பணிக்கு சேர்ந்த துாய்மை பணியாளர்களும் வேலைக்கு வராததால், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் ஒப்பந்த நிறுவனம் தவித்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில், துாய்மை பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. துாய்மைப்பணியை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், அதன் தலைவர் பாரதி தலைமையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன், 13 நாட்களாக தொடர் போராட்டத்தை துாய்மை பணியாளர்கள் முன்னெடுத்தனர்.
இப்போாராட்டதிற்கு அ.தி.மு.க., - பா.ஜ., - நா.த.க., உள்ளிட்ட கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்., - வி.சி., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால், இப்போராட்டம் மாநில அளவில் பேசப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 922 பேரை, நள்ளிரவில் போலீசார் கைது செய்து, அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால், அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டதை தவிர்க்க, காலை உணவு போன்ற பல்வேறு திட்டங்களை துாய்மை பணியாளர்களுக்காக அரசு அறிவித்தது.
மேலும், மாநகராட்சி மேயர் பிரியா, துாய்மை பணியாளர்களை அழைத்து சென்று, முதல்வருக்கு நன்றி சொல்லும் நிகழ்வை நடத்தினார்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தவோ அல்லது மக்கள் பாதிக்கப்படாதவாறு மாற்று நடவடிக்கை எடுக்கவோ, இதுவரை மாநகராட்சி முயற்சிக்கவில்லை.
இதனால், வடசென்னையில் உள்ள எட்டு மண்டலங்களில், 3,000 டன் வரை குப்பை தேக்கம் அடைந்துள்ளது.
வீடுகளில், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே குப்பை சேகரிக்கப்படுவதால், சாலை ஓரங்களில் பொதுமக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே, நீதிமன்ற வழக்கு முடியும் வரை, குப்பை தேக்கத்தை தவிர்க்க தற்காலிக அடிப்படையிலாவது, துாய்மை பணிக்க ஆட்களை நியமித்து, ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
போராட்டத்தின்போது, 200 பேர் வரை பணியில் சேர்ந்தனர். போராட்டம் முடிவுக்கு வந்த பின், 600 பேர் பணிக்கு திரும்பினர். மொத்தம், 800 பேர் வரை பணியில் சேர்ந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால், பலர் வேலைக்கு வரவில்லை.
இதனால், குறைவான நபர்களை வைத்து மட்டுமே குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -