ADDED : செப் 18, 2025 08:16 PM

காலிறுதியில் ஸ்வியாடெக்
சியோல்: தென் கொரியாவில் நடக்கும் டபிள்யு.டி.ஏ., கொரிய ஓபன் டென்னிஸ் 'ரவுண்டு-16' போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-3, 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெல்ஜியம் 'ஹாட்ரிக்'
பாசே: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 3-0 (25-22, 25-20, 25-12) என, அல்ஜீரியாவை வீழ்த்தியது. ஏற்கனவே உக்ரைன், இத்தாலியை வீழ்த்திய பெல்ஜியம், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது.
லிவர்பூல் அபாரம்
லண்டன்: இங்கிலாந்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ('கிளப்') கால்பந்து போட்டியில் லிவர்பூல், அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. இதில் லிவர்பூல் அணி 3-2 என 'திரில்' வெற்றி பெற்றது. ஜெர்மனியில் நடந்த போட்டியில் பேயர்ன் முனிக் அணி 3-2 என செல்சியை வென்றது.
கத்தார் கலக்கல்
அம்மான்: ஜோர்டானில் நடக்கும் ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் (17 வயது) லீக் போட்டியில் கத்தார், சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் கத்தார் அணி 27-23 என வெற்றி பெற்றது. ஏற்கனவே சீனாவை வென்ற கத்தார் அணி, 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
எக்ஸ்டிராஸ்
* பெங்கால் டென்னிஸ் சங்க தலைவராக, முன்னாள் இந்திய வீரர் லியாண்டர் பயஸ் நியமிக்கப்பட உள்ளார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர், கிராண்ட்ஸ்லாம் இரட்டையரில் 18 பட்டம் கைப்பற்றினார்.
* முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், ஹாங்காங் சிக்சஸ் தொடரில் (நவ. 7-9) இந்திய அணி சார்பில் பங்கேற்க உள்ளார்.
* வில்வித்தை பிரிமியர் லீக் முதல் சீசனில் (அக். 2-12, டில்லி), உலகின் 'நம்பர்-1' வீராங்கனை ஆன்ட்ரியா பெசெரா (மெக்சிகோ), பிராடி எலிசன் (அமெரிக்கா), இந்தியாவின் தீபிகா குமாரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.