ADDED : செப் 15, 2025 10:31 PM

ஜெர்மனி 'சாம்பியன்'
ரிகா: லாட்வியாவில் நடந்த 'யூரோ' கூடைப்பந்து பைனலில் துருக்கி, ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 88-83 (24-22, 16-24, 26-21, 22-16) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (1993, 2025) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கியூபா கலக்கல்
பாசே: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் கியூபா, கொலம்பியா அணிகள் மோதின. இதில் கியூபா அணி 3-0 (25-22, 25-21, 25-20) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஜெர்மனி அணி 3-0 (25-17, 25-23, 25-21) என சிலியை வென்றது.
பைனலில் ஸ்பெயின்
மார்பெல்லா: ஸ்பெயினில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ், பைனலுக்கான தகுதிச் சுற்றில் ஸ்பெயின், டென்மார்க் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி 2-3 என, பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. அமெரிக்க அணி 2-3 என, செக்குடியரசிடம் தோல்வியடைந்தது.
அரையிறுதியில் இங்கிலாந்து
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி காலிறுதியில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 40-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதியில் பிரான்ஸ் அணி 18-13 என, அயர்லாந்தை வீழ்த்தியது. அரையிறுதியில் (செப். 20) இங்கிலாந்து, பிரான்ஸ் மோதுகின்றன.
எக்ஸ்டிராஸ்
* சீன மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் லக்சயா சென், சிந்து, ஆயுஷ் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
* கோல்கட்டாவில் இன்று நடக்கவுள்ள ஆசிய கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக்-2 கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் மோகன் பகான் அணி, துர்க்மெனிஸ்தானின் அஹல் அணியை சந்திக்கிறது.
* புரோ லீக் ஹாக்கி 7வது சீசன் வரும் டிச. 9ல் அர்ஜென்டினா, அயர்லாந்தில் துவங்குகிறது. இந்தியா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 9 அணிகள், 144 போட்டிகளில் விளையாடுகின்றன. ஆண்கள், பெண்கள் பிரிவில் கோப்பை வெல்லும் அணிகள், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் (2028) போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
* குரோஷியாவில் நடக்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 'பிரீஸ்டைல்' 65 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சுஜீத் கல்கல் 5-6 என, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஈரானின் ரஹ்மான் மூசா கலிலியிடம் தோல்வியடைந்தார்.