ADDED : செப் 13, 2025 09:58 PM

பைனலில் ஜெர்மனி
ரிகா: லாட்வியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து அரையிறுதியில் ஜெர்மனி, பின்லாந்து அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 98-86 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் துருக்கி அணி 94-68 என, கிரீசை வீழ்த்தியது. பைனலில் (செப். 14) ஜெர்மனி, துருக்கி அணிகள் மோதுகின்றன.
அரையிறுதியில் நியூசிலாந்து
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்கள் உலக கோப்பை ரக்பி தொடருக்கான காலிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 46-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
அமெரிக்கா கலக்கல்
பாசே: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் அமெரிக்க அணி 3-0 (25-20, 25-21, 25-14) என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி 3-1 (20-25, 25-22, 25-19, 25-19) என பெருவை வென்றது.
எகிப்து-கினியா மோதல்
ஓரன்: அல்ஜீரியாவில் நடக்கும் ஆப்ரிக்க பெண்கள் ஜூனியர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் எகிப்து அணி 26-25 என அங்கோலாவை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் கினியா அணி 28-22 என துனியாவை வென்றது. பைனலில் எகிப்து, கினியா மோதுகின்றன.
எக்ஸ்டிராஸ்
* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், வரும் அக். 11-15ல் ஆசிய டேபிள் டென்னிஸ் (அணி) சாம்பியன்ஷிப் 28வது சீசன் நடக்கவுள்ளது. இத்தொடரில் இருந்து யு.ஏ.இ., விலகியதால், 22 நாடுகள் பங்கேற்கின்றன.
* கேரளா கிரிக்கெட் அணியில் இருந்து விலகிய ஜலஜ் சக்சேனா, மகாராஷ்டிரா அணியில் இணைந்தார். இவர், 2025-26 ரஞ்சி கோப்பை சீசனில் மகாராஷ்டிரா சார்பில் பங்கேற்க உள்ளார்.
* மலேசியாவில் நடக்கும் பெண்கள் (16 வயது) ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ('டிவிசன்-பி') லீக் போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 70-67 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.