ADDED : மே 20, 2026 10:40 PM

கொல்கட்டா: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 14 அணிகள், 'ரவுண்டு-ராபின்' முறையில் விளையாடுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும். இதுவரை நடந்த போட்டிகளில் முடிவில் ஈஸ்ட் பெங்கால் (23 புள்ளி, 12 போட்டி), மோகன் பகான் (23 புள்ளி, 12 போட்டி), பெங்களூரு (23 புள்ளி, 13 போட்டி), பஞ்சாப் (22 புள்ளி, 12 போட்டி), மும்பை (22 புள்ளி, 12 போட்டி), ஜாம்ஷெட்பூர் (21 புள்ளி, 12 போட்டி) 'டாப்-6' வரிசையில் உள்ளன.
கடைசி சுற்று போட்டிகளில் (மே 21) ஈஸ்ட் பெங்கால்-இன்டர் காஷி (இடம்: கொல்கட்டா), பஞ்சாப்-மும்பை (டில்லி), மோகன் பகான்-டில்லி (கொல்கட்டா), ஜாம்ஷெட்பூர்-ஒடிசா (ஜாம்ஷெட்பூர்) அணிகள் மோதுகின்றன. இந்த நான்கு போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு துவங்குகின்றன. இப்போட்டிகளின் முடிவை பொறுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி உறுதியாகும். தற்போதுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களில் உள்ள அணிகளுக்கும் கோப்பை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
ரஞ்சி கோப்பை எப்போது
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் தொடர்களுக்கான (2026-27) அட்டவணை வெளியானது. ரஞ்சி கோப்பை தொடர், மீண்டும் இரண்டு கட்டமாக நடக்கவுள்ளது. முதற்கட்ட போட்டிகள் வரும் அக். 11ல் துவங்குகின்றன. இரண்டாம் கட்ட போட்டிகள் அடுத்த ஆண்டு ஜன. 17 முதல் மார்ச் 3 வரை நடக்க உள்ளன. இதில் 'நாக்-அவுட்' போட்டிகளும் (பிப். 9 - மார்ச் 3) அடங்கும்.
மண்டலங்களுக்கு இடையிலான துலீப் டிராபி, வரும் ஆக. 23 முதல் செப். 10 வரை பெங்களூருவில் நடக்கவுள்ளது. நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன் ஜம்மு காஷ்மீர், 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோதும் இரானி கோப்பை, அக். 1-5ல் ஸ்ரீநகரில் நடக்கவுள்ளது.
சையது முஷ்தாக் அலி டிராபி, வரும் நவ. 14 முதல் டிச. 6 வரை நடக்கவுள்ளது. லீக் போட்டிகள் மும்பை, மொகாலி, விசாகப்பட்டனம், கொல்கட்டாவிலும், 'நாக்-அவுட்' போட்டிகள் நாக்பூரில் நடக்கவுள்ளன. விஜய் ஹசாரே டிராபி, டிச. 14 முதல் 2027, ஜன. 8 வரை நடத்தப்படுகிறது.
