/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'கைப்பிடி'...கபடி...எப்படி * புரோ லீக் தொடரில் 'விறுவிறு'
/
'கைப்பிடி'...கபடி...எப்படி * புரோ லீக் தொடரில் 'விறுவிறு'
'கைப்பிடி'...கபடி...எப்படி * புரோ லீக் தொடரில் 'விறுவிறு'
'கைப்பிடி'...கபடி...எப்படி * புரோ லீக் தொடரில் 'விறுவிறு'
UPDATED : செப் 20, 2025 11:15 AM
ADDED : செப் 19, 2025 11:20 PM

ஜெய்ப்பூர்: தமிழகத்தில் பிறந்த வீர விளையாட்டான கபடி புத்துயிர் பெற்றிருக்கிறது. புரோ கபடி லீக் தொடரின் புதிய விதிமுறை, போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்துள்ளது.
கபடி...கபடி என உச்சரித்துக் கொண்டே, தொடையில் ஓங்கி தட்டி எதிரணிக்குள் புகுந்து பம்பரமாக ஆடும் கபடி வீரர்களை காண ரசிகர் பட்டாளம் அதிகம். ஜல்லிக்கட்டு காளையை அடக்குவதற்கு பயிற்சியாக தமிழகத்தில் 'சடுகுடு' என விளையாடப்பட்டது. சக வீரர்களுடன் கைகோர்த்து விளையாடியதால், 'கைப்பிடி' என அழைக்கப்பட்டது. பின் கபடி ஆக மாறியது.
வளர்ச்சி பாதை
கிரிக்கெட் போல கபடியை வளர்ச்சி அடைய செய்ய, இந்தியாவில் 2014ல் புரோ கபடி லீக் தொடர் துவங்கப்பட்டது. தமிழ் தலைவாஸ் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது இரண்டாவது கட்ட லீக் போட்டிகள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 'ரைவல்ரி வீக்' என நடக்கிறது. இங்கு 'ஜியோ ஸ்டார்' ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் புரோ கபடி லீக் தொடரின் தொழில்நுட்ப இயக்குநர் பிரசாத் ராவ் கூறியது:
நவீன ஆட்டம்
ஆரம்ப காலத்தில் அதிக எடை கொண்ட பலசாலிகள் மட்டுமே கபடியில் பங்கேற்றனர். தற்போது அறிவியல்பூர்வமான நவீன விளையாட்டாக மாறிவிட்டது. ஜூனியர், சப்-ஜூனியர், சீனியர் என ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வலிமையில் இருந்து படுவேகமான, துல்லியமான ஆட்டமாக உருவெடுத்துள்ளது. மண் தரை களத்தின் மத்தியில் கோடு வரைந்து ஆடிய காலம் மலையேறிவிட்டது. இப்போது உள்ளரங்கில் 'மேட்' விரிப்பில் விளையாடுகின்றனர். வீரர்கள் காயம் ஏற்படாமல் தடுக்க பிரத்யேக தலைக்கவசம், முழங்கால் பகுதியை பாதுகாக்க 'கேப்', வண்ண உடைகள் அணிகின்றனர். நட்சத்திர ஓட்டலில் தங்குகின்றனர். ஒவ்வொரு அணிக்கும் கபடி நுணுக்கம் கற்றுத் தரும் தலைமை பயிற்சியாளர், உடற்தகுதி, யோகா, உணவு முறைக்கு என தனித்தனி பயிற்சியாளர்கள் உள்ளனர்.
முடிவு முக்கியம்
புதிய விதிமுறைக்கு வரவேற்பு காணப்படுகிறது. 'டிரா' அல்லாமல் முடிவை மட்டும் எதிர்பார்க்கிறோம். இதற்காக 'டை-பிரேக் சிஸ்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டி 'டை' ஆனால், இரு அணிக்கும் 5 ரெய்டு வழங்கப்படும். இதிலும் முடிவு கிடைக்காத பட்சத்தில் 'கோல்டன் ரெய்டு' முறை பின்பற்றப்படும். இதற்கு பின்பும் சமநிலை நீடித்தால், 'டாஸ்' மூலம் வெற்றி பெறும் அணி முடிவு செய்யப்படும். நடுவர் தவறை மறுபரிசீலனை செய்ய 'ரிவியு சிஸ்டம்', புள்ளிப்பட்டியலில் 'டாப்-8' அணிகள் வரை பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு போன்றவை ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களுக்கு 'திரில்' அனுபவத்தை கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.