ADDED : மே 31, 2026 10:31 PM

பசடேனா: கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில், 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் (ஜூன் 11 - ஜூலை 19) நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் மெக்சிகோ, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஜோஹன் வாஸ்குவெஸ் ஒரு கோல் (28வது நிமிடம்) அடித்து கைகொடுக்க மெக்சிகோ அணி 1-0 என வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் சவுதி அரேபியா, ஈகுவடார் அணிகள் மோதின. இதில் ஈகுவடார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நைஜீரியா அணி 3-0 என, ஜமைக்காவை வென்றது. தென் கொரிய அணி 5-0 என, டிரினிடாட் அண்ட் டொபாகோ அணியை தோற்கடித்தது.
இந்திய பெண்கள் அசத்தல்
காகமிகஹாரா: ஜப்பானில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில், தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே முதல் போட்டியில் மலேசியாவை வென்றிருந்தது. இந்திய அணிக்கு நவ்ஷீன் நாஸ் (4வது நிமிடம்), ஷ்ருதி குமாரி (21வது), கிரண் எக்கா (43வது) கைகொடுத்தனர்.
ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு ஆஷிஸ் தானி பூர்த்தி (25வது நிமிடம்), கேத்தன் குஷ்வாஹா (32வது) ஆறுதல் தந்தனர்.
