இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி * நேஷன்ஸ் ஹாக்கி தொடரில்...
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி * நேஷன்ஸ் ஹாக்கி தொடரில்...
ADDED : ஜூன் 18, 2026 11:46 PM

ஆக்லாந்து: நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. நேற்று உருகுவேயை 3-2 என வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நியூசிலாந்தில் பெண்களுக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி 4வது சீசன் நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் ஆக்லாந்தில் நடக்கின்றன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்லும் அணி, 2026-27 புரோ லீக் தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.
'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் இரு போட்டியில் அமெரிக்கா, ஜப்பானை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று தனது கடைசி, மூன்றாவது லீக் போட்டியில் உருகுவேயை எதிர்கொண்டது.
போட்டியின் 13வது நிமிடத்தில் உருகுவேயின் அப்பென்னினோ முதல் கோல் அடித்தார். இந்தியா சார்பில் தீபிகா (24 வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1-1 என சமனில் இருந்தது.
இரண்டாவது பாதியில் இந்தியாவின் தீபிகா சோரங் (43) தன் பங்கிற்கு கோல் அடித்தார். மறுபக்கம் உருகுவேயின் விலார் (55) கோல் அடிக்க, மீண்டும் ஸ்கோர் சமன் (2-2) ஆனது. இதற்கு அடுத்த நிமிடத்தில் எழுச்சி பெற்ற தீபிகா (56) இப்போட்டியில் இரண்டாவது கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வென்ற இந்தியா, 9 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது. மற்றொரு போட்டியில் ஜப்பானை வென்ற அமெரிக்கா (4-0) அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, சிலியை சந்திக்க உள்ளது.
