ADDED : ஜூன் 15, 2026 11:39 PM

தாஷ்கென்ட்: 'உஸ்' கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் ஆறாவது இடம் பிடித்தார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மூன்றாவது 'உஸ்' கோப்பை செஸ் தொடர் நடந்தது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 10 பேர் பங்கேற்றனர். நேற்று 9வது, கடைசி சுற்று போட்டிகள் நடந்தன.
அர்ஜுன், கிரீசின் நிகோலசை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 46 நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.
விதித் குஜ்ராத்தி, ரஷ்யாவின் இயான் நேபோம்னியாட்சி மோதிய மற்றொரு போட்டி 29 நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஏழு சுற்று முடிவில் இயான் நேபோம்னியாட்சி (5.0) 3வது, அர்ஜுன் (5.0) 5வது, விதித் குஜ்ராத்தி (3.5) 9வது இடம் பிடித்தனர். உஸ்பெகிஸ்தான் வீரர்கள் ஷம்சிதின் (5.5), மடமினோவ் (5.5) முதலிடம் பிடித்தனர்.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் அசத்திய மடமினோவ் (2.0-0) என வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.
ஆதித்யா 'வெள்ளி'
மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் ஆதித்யா மிட்டல் பங்கேற்றார். 9 சுற்றில் 5.5 புள்ளி எடுத்த இவர், இரண்டாவது இடம் பெற்ற, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
* 'பியூச்சர்ஸ்' பிரிவில் இந்திய வீரர் சேதுராமன் (5.5) வெண்கலம் கைப்பற்றினார்.
