ADDED : ஜூன் 19, 2026 11:41 PM

மும்பை: குளோபல் செஸ் தொடரில் இந்தியாவின் இனியன் சாம்பியன் ஆனார்.
மும்பையில் குளோபல் செஸ் தொடரின் 9வது சீசன் நடந்தது. இதன் ஓபன் பிரிவில் 13 கிராண்ட் மாஸ்டர்கள், 33 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட, 16 நாடுகளில் இருந்து 56 பேர் களமிறங்கினர். மொத்தம் ரூ. 35 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இத்தொடரின் 'நம்பர்-1' வீரராக இந்தியாவின் இனியன் பங்கேற்றார். மொத்தம் 9 சுற்று போட்டிகள் நடந்தன.
உலகின் 'நம்பர்-6' வீரர் பெலாரசின் அலெக்சி பெடெரோவ், ரஷ்யாவின் போரிஸ் செவ்சென்கோ என முன்னணி வீரர்களை வீழ்த்திய இனியன், 8 சுற்று முடிவில் 7.0 புள்ளிகள் பெற்றார். 9வது, கடைசி சுற்றில் 'டிரா' செய்த இவர், ஒட்டுமொத்தமாக 7.5 புள்ளி பெற்று (6 வெற்றி, 3 'டிரா') சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். செவ்சென்கோ, இந்தியாவின் அஜய் சந்தோஷ் அடுத்த இரு இடம் பிடித்தனர்.
சாலஞ்சர் பிரிவில் இந்தியாவின் நிதின் பாபு, அருண் கட்டாரியா முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். ஜூனியர் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சர்மா முதலிடம் பெற்றார்.
