ADDED : மே 10, 2026 08:45 PM

வார்சா: கிராண்ட் செஸ் முதல் தொடரில் இந்தியாவின் குகேஷ் 6வது இடம் பிடித்தார்.
கிராண்ட் செஸ் டூர் 11வது சீசன், 6 தொடர்களாக நடக்கிறது. முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் வீரர் சாம்பியன் பட்டம் வெல்வார். இதன் முதல் தொடர் போலந்தின் வார்சா நகரில் நடந்தது. முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான போட்டியில், 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் 9.0 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார்.
அடுத்து, 'பிளிட்ஸ்' முறையிலான போட்டி 9 சுற்றுகளாக நடந்தது. முதல் 4 சுற்றுகளின் முடிவில், குகேஷ் 1.5 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்தார். ஐந்தாவது சுற்றில் அமெரிக்காவின் பேபியானோ காருணாவிடம் தோல்வியடைந்த குகேஷ், பிரான்சின் லாக்ரேவுக்கு எதிரான 6வது சுற்றை 'டிரா' செய்தார்.
ஏழாவது சுற்றில் அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நீமனை வீழ்த்தி குகேஷ், 8வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவிடம் வீழ்ந்தார். ஒன்பதாவது சுற்றில் எழுச்சி கண்ட குகேஷ், போலந்தின் ஜான் டுடாவை தோற்கடித்தார். ஒன்பது சுற்றுகளின் முடிவில் 8.0 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்தார் குகேஷ்.
'ரேபிட்', 'பிளிட்ஸ்' போட்டிகளின் முடிவில், 17 புள்ளிகளுடன் (9.0 + 8.0) 6வது இடம் பிடித்தார் குகேஷ். முதல் மூன்று இடங்களை அமெரிக்காவின் ஹான்ஸ் நீமன் (22.5 புள்ளி), பேபியானோ காருணா (22), சோ வெஸ்லே (21) கைப்பற்றினர்.
