/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'சிங்கப் பெண்கள்' ஜாஸ்மின், மீனாட்சி * உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்
/
'சிங்கப் பெண்கள்' ஜாஸ்மின், மீனாட்சி * உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்
'சிங்கப் பெண்கள்' ஜாஸ்மின், மீனாட்சி * உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்
'சிங்கப் பெண்கள்' ஜாஸ்மின், மீனாட்சி * உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்
ADDED : செப் 14, 2025 11:14 PM

லிவர்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இந்தியாவின் ஜாஸ்மின், மீனாட்சி தங்கம் வென்றனர். நுபுர் வெள்ளி, பூஜா வெண்கலம் வென்றனர்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
57 கிலோ பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 21, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியாவை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார் ஜாஸ்மின். மூன்று சுற்று முடிவில், 5 நடுவர்களில் 4 பேர் ஜாஸ்மினுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர்.
முடிவில் ஜாஸ்மின் 4-1 என (30-27, 29-28, 30-27, 28-29-29-28) வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றி, உலக சாம்பியன் ஆனார்.
மீனாட்சி அபாரம்
பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு பைனலில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, மூன்று முறை உலக சாம்பியன் ஆன, கஜகஸ்தானின் நஜிம் கைஜய்பேவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட மீனாட்சி, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, புதிய சாம்பியன் ஆனார்.
நுபுர் 'வெள்ளி'
பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு பைனலில் இந்தியாவின் நுபுர் ஷியோரன், போலந்தில் அகட்டாவை சந்தித்தார். இதில் சமமான போட்டியை வெளிப்படுத்திய போதும், நுபுர் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
பூஜா 'வெண்கலம்'
80 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பூஜா, பாரிசின் எமிலி அஸ்குய்த்தை சந்தித்தார். இதில் பூஜா 1-4 என தோல்வியடைந்து, வெண்கலம் கைப்பற்றினார். இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கம் வென்றது.
பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்ட பாராட்டு செய்தியில்,' உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஜாஸ்மின், மீனாட்சிக்கு வாழ்த்துகள். இவர்களது சிறப்பான செயல்பாடு பெருமையாக உள்ளது. இது, வரும் காலங்களில் அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் ஊக்கம் தரும். எதிர்கால வெற்றிக்கு வாழ்த்துகள்,' என தெரிவித்துள்ளார்.
சாக் ஷி வழியில்...
குத்துச்சண்டை குடும்பத்தை சேர்ந்தவர் ஹரியானாவின் ஜாஸ்மின். இவரது மாமா சந்தீப், பர்விந்தர் என இருவரும் முன்னாள் தேசிய சாம்பியன்கள். இந்தியாவின் முன்னாள் 'ஹெவிவெயிட்' குத்துச்சண்டை வீரர் ஹவா சிங், இவரது துாரத்து உறவினர். கடந்த 2016, ரியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் சாக் ஷி வெண்கலம் வென்ற போது ஜாஸ்மின், 10 வது படித்துக் கொண்டிருந்தார். அப்போது, 'விளையாட்டில் பெண்கள் சாதிக்கின்றனர். நீயும் முயற்சி செய்,' என மாமா தெரிவிக்க, குத்துச்சண்டையில களமிறங்கினார்.
பாரிஸ் ஒலிம்பிக் முதல் சுற்றில் தோற்றாலும், தற்போது உலக சாம்பியனாகி உள்ளார்.
மூன்றாவது வீராங்கனை
அன்னிய மண்ணில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்தியாவின் மூன்றாவது, நான்காவது வீராங்கனை என ஜாஸ்மின், மீனாட்சி பெருமை பெற்றனர். முன்னதாக மேரி கோம், நிஹாத் ஜரீன் இதுபோல சாதித்தனர்.
* தவிர உலக குத்துச்சண்டையில் சாம்பியன் ஆன 9வது (ஜாஸ்மின்), 10வது (மீனாட்சி) இந்திய வீராங்கனை ஆகினர். முன்னதாக மேரி கோம் (6 முறை, 2002, 2005, 2006, 2008, 2010, 2018), நிஹாத் ஜரீன் (2 முறை, 2022, 2023), சரிதா தேவி (2006), ஜென்னி (2006), லேஹா (2006), நீத்து கங்ஹாஸ் (2023), லவ்லினா (2023), சவீட்டி (2023) தங்கம் வென்றுள்ளனர்.
ஆட்டோ டிரைவர் மகள்
ஹரியானாவின் ரூர்கி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி ஹூடா 24. இரண்டு அக்கா, ஒரு அண்ணன் உள்ளனர். இவரது தந்தை ஸ்ரீகிருஷ்ணன் ஹூடா, வாடகை ஆட்டோ டிரைவராக உள்ளார்.
கடந்த 2013ல் விஜய் ஹூடா என்பவர், 'ஆபத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், குழந்தைகளுக்கு குத்துச்சண்டை கற்றுக் கொடுத்தார். இதைப் பார்த்த மீனாட்சி, 2018ல் இங்கு சேர முடிவெடுத்தார்.
'மகளின் விளையாட்டுக்கு தகுந்த உணவு உட்பட மற்ற வசதிகளை செய்து தர முடியாது,' என்பதால் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் பயிற்சியாளர் விஜய், அனைத்து உதவியும் செய்ய, முதல் தொடரில் சாதனை படைத்துள்ளார்.