/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'உலக' ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா 'ஷாக்' * நான்காவது இடம் பிடித்து சச்சின் அசத்தல்
/
'உலக' ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா 'ஷாக்' * நான்காவது இடம் பிடித்து சச்சின் அசத்தல்
'உலக' ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா 'ஷாக்' * நான்காவது இடம் பிடித்து சச்சின் அசத்தல்
'உலக' ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா 'ஷாக்' * நான்காவது இடம் பிடித்து சச்சின் அசத்தல்
ADDED : செப் 18, 2025 11:22 PM

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, 8 வது இடம் பிடித்து ஏமாற்றம் தந்தார். சச்சின் 4வது இடம் பிடித்து ஆறுதல் தந்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற, நடப்பு உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா 27, சச்சின் யாதவ் 25, என இருவர் உட்பட மொத்தம் 12 பேர் பங்கேற்றனர்.
முதல் இரு வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 83.65, 84.03 மீ., துாரம் எறிந்தார். 3, 5வது வாய்ப்பில் பவுல் செய்த இவர், 4வது வாய்ப்பில் 82.86 மீ., துாரம் மட்டும் எறிந்தார். 'டாப்-6' பட்டியலில் இருந்தால் மட்டுமே கடைசி, 6வது வாய்ப்பு தரப்படும் என்பதால், நீரஜ் சோப்ரா (84.03) 8வது இடம் பிடித்து வெளியேறி, அதிர்ச்சி தந்தார். 85 மீ., துாரத்தை ஒருமுறை எட்டாமல் திரும்பினார்.
சச்சின் நம்பிக்கை
மறுபக்கம் முதன் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இந்தியாவின் சச்சின், முதல் வாய்ப்பில் 86.27 மீ., துாரம் எறிந்து நம்பிக்கை தந்தார். அடுத்து பவுல் செய்த இவர் 3, 4 வது வாய்ப்பில் 85.71, 84.90 மீ., கடைசி இரு வாய்ப்பில் 85.96, 80.95 மீ., துாரம் மட்டும் எறிந்தார். இருப்பினும் ஈட்டி எறிதலில் தனது சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்தார் சச்சின் (86.27 மீ.,). இதற்கு முன் இவர் 85.16 மீ., எறிந்ததே அதிகம்.
டிரினிடாட் அண்டு டுபாகோவின் கெஷ்ஹார்ன் வால்காட் (88.16 மீ.,), கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (87.38 மீ.,) அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் (86.67 மீ.,) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
முதன் முறை
கடந்த 2021 பின்லாந்து போட்டியில் நீரஜ் சோப்ரா, 3வது இடம் பிடித்தார். இதன் பின் களமிறங்கிய 26 போட்டிகளில் தொடர்ந்து 'டாப்-2' பட்டியலில் இடம் பெற்று, பதக்கம் வென்றார். அதிகபட்சம் கத்தாரில் 90.23 மீ., (2025) துாரம் எறிந்தார். கடைசியாக டைமண்ட் லீக் பைனலில் வெள்ளி வென்றார். தற்போது முதன் முறையாக வெறுங்கையுடன் திரும்புகிறார்.
2017க்குப் பின்...
கடைசியாக கடந்த 2017, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா, 15வது இடம் பிடித்தார். இதன் பின் சர்வதேச அரங்கில் பங்கேற்ற போட்டியில், முதன் முறையாக நீரஜ் சோப்ரா, எவ்வித பதக்கமும் வெல்லவில்லை.
40 செ.மீ.,ல் நழுவிய வெண்கலம்
இந்திய வீரர் சச்சின், உ.பி.,யின் கேக்ரா கிராமத்தை சேர்ந்தவர். 6 அடி, 5 இன்ச் உயரம் கொண்ட இவர், கிரிக்கெட் பிரியர். டென்னிஸ் பந்துகளில் வேகமாக பவுலிங் செய்வார். 2019ல் முன்னாள் ஈட்டி எறிதல் வீரர் சந்தீப் யாதவ், சச்சினின் தோள் வலிமையை கண்டறிந்து, ஈட்டி எறிதலுக்கு மாற்றினார். 2023ல் முதன் முறையாக 80 மீ., துாரத்துக்குள் மேல் ஈட்டி எறிந்தார்.
2025 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி (85.16) வென்றார். உலக தடகள தகுதிச்சுற்றில் 10 வது இடம் (83.67) பிடித்து பைனலுக்கு முன்னேறினார். பைனலில் 86.27 மீ., துாரம் எறிந்த சச்சின், 40 செ.மீ., வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை, கர்டிஸ் தாம்ப்சனிடம் (86.67) இழந்தார்.
பூஜா '32'
பெண்களுக்கான 800 மீ., ஓட்டம் நேற்று நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் 'ஹீட்-6' ல் களமிறங்கினார் இந்தியாவின் பூஜா. 2 நிமிடம், 01.03 வினாடி நேரத்தில் வந்து கடைசி இடம் (7வது) பிடித்தார். ஒட்டுமொத்தமாக 32 வது இடம் பெற்று, பைனல் வாய்ப்பை இழந்தார்.