ADDED : மே 24, 2026 10:59 PM

லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச தடகளத்தின் 5000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் வெள்ளி வென்றார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சர்வதேச தடகள போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் 27, பங்கேற்றார். இலக்கை 13 நிமிடம், 03.93 வினாடியில் கடந்த குல்வீர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். தனது சிறந்த செயல்பாட்டை (12 நிமிடம், 59.77 வினாடி) முறியடிக்கத்தவறிய குல்வீர், காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி பெற இந்திய தடகள கூட்டமைப்பு நிர்ணயித்த இலக்கை (13 நிமிடம், 10.64 வினாடி) அடைந்தார். தவிர இவர், வெளியரங்கு தடகளத்தில் தனது தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், இலக்கை 13 நிமிடம், 11.82 வினாடியில் கடந்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் நடந்த போட்டியில் அசத்திய குல்வீர் சிங், காமன்வெல்த் விளையாட்டு 10,000 மீ., ஓட்டத்தில் (27 நிமிடம், 24.18 வினாடி) பங்கேற்க தேவையான தகுதி இலக்கை எட்டினார். இதனால் காமன்வெல்த் விளையாட்டில் குல்வீர் சிங், 5000, 10000 மீ., ஓட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த எரித்ரியாவின் ஹப்டோம் சாமுவேல் (12 நிமிடம், 57.22 வினாடி) தங்கம் வென்றார்.
