/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி 2வது இடம்
/
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி 2வது இடம்
ADDED : செப் 14, 2025 10:39 PM

ஹாங்சு: ஆசிய கோப்பை ஹாக்கி பைனலில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, 2வது இடம் பிடித்தது.
சீனாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடந்தது. பைனலில் இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 21வது நிமிடத்தில் சீனாவின் ஜிக்ஸியா 'பெனால்டி கார்னர்' மூலம் ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவு 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய சீன அணிக்கு ஹாங் லி (41வது நிமிடம்), மீராங் ஜூ (51வது), ஜியாகி ஜாங் (52வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். தொடர்ந்து போராடிய இந்திய வீராங்கனைகளால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து, 3வது முறையாக (1999, 2009, 2025) 2வது இடம் பிடித்தது.
சீன அணி, 3வது முறையாக (1989, 2009, 2025) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதிக முறை (3) கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை தென் கொரியா, ஜப்பானுடன் பகிர்ந்து கொண்ட சீனா, அடுத்த ஆண்டு (ஆக. 14-30) பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றது. இந்தியா, ஜப்பான், தென் கொரியா, மலேசிய அணிகள், உலக கோப்பை தகுதி சுற்றில் (2026, பிப். 28 - மார்ச் 8) விளையாட தகுதி பெற்றன.