ADDED : ஜூன் 07, 2026 11:22 PM

மும்பை: ''இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவது மிகவும் சவாலானது,'' என, ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து செல்லவுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் (ஜூன் 26, 28) கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் இங்கிலாந்து மண்ணில், ஐந்து 'டி-20' (ஜூலை 1, 4, 7, 9, 11), மூன்று ஒருநாள் போட்டிகள் (ஜூலை 14, 16, 19) கொண்ட தொடரில் விளையாடுகிறது. 'டி-20' தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், சமீபகாலமாக 'பார்மின்றி' தவிக்கும் சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் 31, நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஷ்ரேயஸ் ஐயர் கூறியது: இந்திய 'டி-20' அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதால், எனது ஆளுமையை மாற்றிக் கொள்ள போவதில்லை. முன்பு எப்படி இருந்தேனோ, அப்படியே தான் இருப்பேன். மற்றொருவரின் நிழலாக செயல்படமாட்டேன்.
இளம் வயதில் சவால்களை மிகவும் விரும்பினேன். மும்பை போன்ற நகரில் இருந்து வருபவர்களுக்கு சவால்களை சந்திக்கும் மனப்பான்மை இயல்பானது. ஏனெனில் மும்பையில் கிரிக்கெட் மிகவும் பிரபலமானது. தெருவில் விளையாடும் ஒவ்வொரு சிறுவனுக்கும், மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும்.
போட்டியில் வெற்றி பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துவேன். நம்மிடம் உள்ள போட்டி மனப்பான்மை, நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது. எனக்கு கிடைத்துள்ள கேப்டன் பொறுப்பு, மிகப் பெரிய சவாலாக அமையும். இதனை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வேன்.
இவ்வாறு ஷ்ரேயஸ் கூறினார்.
