/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நெருப்பு வளையமா...கை நழுவுமா: இந்திய 'பீல்டிங்' தேறுமா
/
நெருப்பு வளையமா...கை நழுவுமா: இந்திய 'பீல்டிங்' தேறுமா
நெருப்பு வளையமா...கை நழுவுமா: இந்திய 'பீல்டிங்' தேறுமா
நெருப்பு வளையமா...கை நழுவுமா: இந்திய 'பீல்டிங்' தேறுமா
ADDED : செப் 25, 2025 11:17 PM

துபாய்: ஆசிய கோப்பை 'சூப்பர்-4' போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய வீரர்கள் துடிப்பாக 'பீல்டிங்' செய்தால், எளிதாக வெற்றி பெறலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி-20' தொடர் நடக்கிறது. இந்தியா ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிவிட்டது. இலங்கை வாய்ப்பை இழந்துவிட்டது. இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் முக்கியத்துவமில்லாத 'சூப்பர்-4' போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜிதேஷ் எதிர்பார்ப்பு: இந்திய அணியின் 'பேட்டிங்' வலுவாக உள்ளது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் அதிரடி துவக்கம் தருகின்றனர். அடுத்து விளாச, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார், 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல் உள்ளனர். சாம்சன் இடம் சிக்கலாக உள்ளது. இவருக்கு 'டாப்-3' வரிசை தான் பொருத்தமானது. வங்கதேசத்திற்கு எதிரான கடந்த போட்டியில் 7வது இடத்தில் கூட களமிறக்கப்படவில்லை. இவருக்கு பதில் மற்றொரு கீப்பர்-பேட்டரான ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கலாம். 5, 6வது இடத்தில் 'பினிஷராக' ஜொலிப்பார். இருப்பினும் அணியில் மாற்றம் செய்ய பயிற்சியாளர் காம்பிர் தயங்குவது சாம்சனுக்கு சாதகம்.
பந்துவீச்சில், பும்ரா விரும்பினால், 'ரெஸ்ட்' கொடுக்கப்படலாம். ஹர்திக் பாண்ட்யா, 'சுழல்' நாயகர்கள் வருண் சக்ரவர்த்தி, குல்தீப், அக்சர் படேல் மீண்டும் அசத்தலாம்.
விளக்கு அமைப்பு: இந்திய அணியின் 'பீல்டிங்' மோசமாக உள்ளது. பாகிஸ்தான் (4 கேட்ச்), வங்கதேசம் (5) உட்பட இதுவரை 12 'கேட்ச்' வாய்ப்பை நமது வீரர்கள் கோட்டைவிட்டனர். இதற்கு துபாய் மைதானத்தின் ஒளி விளக்கு வடிவமைப்பு ஒரு காரணம். மேற்கூரையை சுற்றி 350 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 'நெருப்பு வளையம்' போல மைதானத்தின் அனைத்து பகுதிக்கும் மின்னொளியை பாய்ச்சுகின்றன. இதனால், பந்தை கணித்து பிடிப்பது கடினம். மற்ற மைதானங்களில் பெரிய கோபுரங்களில் இருந்து மின்னொளி பாயும். சில இடங்களில் நிழல் தென்படும். இதை பயன்படுத்தி பந்து வரும் திசையை வீரர்கள் கணித்துவிடுவர். துபாய் மைதானத்தின் தன்மையை இந்திய பீல்டிங் பயிற்சியாளர் திலிப் உணர வேண்டும். இன்று இந்திய அணியினர் பீல்டிங்கில் அசத்தினால் நல்லது.
பேட்டிங் பலவீனம்: இலங்கை அணிக்கு பேட்டிங்கில் நிசங்கா, குசால் மெண்டிஸ், பெரேரா, கேப்டன் அசலங்கா ஏமாற்றுகின்றனர். கமிந்து மெண்டிஸ் ஓரளவுக்கு ரன் எடுக்கிறார். பந்துவீச்சில் தீக் ஷனா, ஹசரங்கா நம்பிக்கை தருகின்றனர்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 31 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 21, இலங்கை 9ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* துபாய் வானிலை வெப்பமாக இருக்கும். ஆடுகளத்தில் 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம்.
பாதிப்பு
வருண் சக்ரவர்த்தி கூறுகையில்,''துபாய் மைதானத்தின் 'நெருப்பு வளையம்' போன்ற விளக்குகள் பாதிப்பை ஏற்படுத்துகினறன. சரியாக பந்தை பார்க்க முடியவில்லை. இதை ஒரு காரணமாக சொல்ல முடியாது. பைனலுக்கு தகுதி பெற்ற நிலையில் 'கேட்ச்' நழுவவிடக்கூடாது. துபாய் மைதானத்திற்கு ஏற்ப விரைவாக பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்,''என்றார்.