ADDED : மே 19, 2026 11:16 PM

சென்னை: கிரிக்கெட் லீக் தொடரில் இம்முறை சென்னை அணிக்காக 'சீனியர்' தோனி, 44, களமிறங்கவில்லை. கால் தசை பிடிப்பால் அவதிப்பட்ட இவர், விரைவில் மீண்டார். நேற்று முன் தினம் சேப்பாக்கத்தில் நடந்த இந்த சீசனின் கடைசி போட்டியில் (எதிர், ஐதராபாத்) பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடற்தகுதி இல்லாததால் விளையாடவில்லை.
இருப்பினும், மைதானத்திற்கு வந்து சக சென்னை வீரர்களுடன் 'குரூப்' போட்டோ எடுத்துக் கொண்டார். போட்டி முடிந்ததும் மைதானத்தை பவனி வந்து ரசிகர்களிடம் அன்பை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து போட்டியில் பங்கேற்பாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது பற்றி தோனி-சென்னை அணி முன்னாள் வீரர் ரெய்னா இடையிலான உரையாடல்:
ரெய்னா: நீங்கள் 2026 கிரிக்கெட் லீக் தொடருக்கு 'மிஸ்டு கால்' கொடுத்து விட்டீர்கள். இதை கணக்கில் கொள்ள முடியாது. அடுத்த ஆண்டு விளையாட வேண்டும்.
தோனி: எனது உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கிறது.
ரெய்னா: நீங்கள் சொல்வதை எல்லாம் நம்ப தயாராக இல்லை. ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த ஆண்டு கண்டிப்பாக போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
தோனி: பார்க்கலாம்
ரெய்னா: தோனி 'பார்க்கலாம்' என்றால், கடினமாக பயிற்சி மேற்கொண்டு மீண்டும் விளையாட வாய்ப்பு உண்டு. இது அவரது தனிப்பட்ட முடிவு. தற்போதைக்கு நேர்மறையான மனநிலையில் உள்ளார்.
சென்னை பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில்,''தோனியின் எதிர்காலம் பற்றி, அணி நிர்வாகம் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த ஆண்டு விளையாடாத போதும், அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார். இம்முறை பலருக்கு அறிமுக வாய்ப்பு கொடுத்தோம். இவர்கள், சென்னை அணியின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களாக உருவெடுப்பர்,'' என்றார்.
கிடைக்குமா 'பிளே ஆப்'
லீக் தொடரில் இதுவரை பெங்களூரு (18), குஜராத் (16), ஐதராபாத் (16) என 3 அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்திற்கு, பஞ்சாப் (13), ராஜஸ்தான் (12), சென்னை (12), டில்லி (12), கொல்கட்டா (11) என ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன.
சென்னை அணி கடைசி போட்டியில் (நாளை, எதிர்-குஜராத்) சிறப்பான 'ரன்ரேட்' பெறும் வகையில் வெற்றி பெற்றால், மற்ற போட்டிகளின் முடிவுக்கு ஏற்ப, 'பிளே ஆப்' வாய்ப்பு தெரியவரும்.
