இந்தியா இரண்டாவது வெற்றி: ஆப்கானிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது
இந்தியா இரண்டாவது வெற்றி: ஆப்கானிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது
ADDED : ஜூன் 17, 2026 11:24 PM

லக்னோ: இரண்டாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி 170 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. கேப்டன் சுப்மன் கில், இஷான் கிஷான் சதம் விளாசினர். இந்திய அணி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. லக்னோவில் 2வது போட்டி நடந்தது. இந்திய 'லெவன்' அணியில் பிரின்ஸ் யாதவ் அறிமுகமானார். 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இரண்டு சதம்: இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (4) ஏமாற்றினார். ரோகித் சர்மா (48) ஓரளவு கைகொடுத்தார். அடுத்து வந்த இஷான் கிஷான், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். பிலால் சமி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கில், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 9வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அசத்திய இஷான் கிஷான், 79 பந்தில் சதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 224 ரன் சேர்த்த போது இஷான் கிஷான் (125 ரன், 79 பந்து, 7X6, 14X4) அவுட்டானார். அபாரமாக ஆடிய சுப்மன் கில், 154 ரன்னில் (2X6, 22X4) ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயஸ் ஐயர் (26), வாஷிங்டன் சுந்தர் (19) நிலைக்கவில்லை. இந்திய அணி 49.5 ஓவரில் 402 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
பிரார் அசத்தல்: கடின இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (41), இப்ராஹிம் ஜத்ரன் (21), செதிகுல்லா அடல் (42) நம்பிக்கை தந்தனர். பொறுப்பாக ஆடிய ரஹ்மத் ஷா (79) அரைசதம் கடந்தார். கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிதி (4), ரஷித் கான் (12) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர்.
ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவரில் 232 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், குர்னுார் பிரார் தலா 3, பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.
எட்டாவது முறை
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 402 ரன் குவித்த இந்தியா, ஒருநாள் போட்டி அரங்கில் அதிக முறை ஒரு இன்னிங்சில் 400 அல்லது அதற்கு மேல் 'ஸ்கோர்' எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை (தலா 8 முறை) தென் ஆப்ரிக்காவுடன் பகிர்ந்து கொண்டது.
