UPDATED : ஜூன் 02, 2026 10:28 PM
ADDED : ஜூன் 02, 2026 10:22 PM

துபாய்: டெஸ்ட் போட்டிகளில் மாலை நேரங்களில் 'பிங்க்' பந்து பயன்படுத்தும் சோதனை முயற்சிக்கு ஐ.சி.சி., அனுமதித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் கிரிக்கெட் விதிகளில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது டெஸ்டில் புதிய முறையை பயன்படுத்த ஐ.சி.சி., அனுமதி தந்துள்ளது.
வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மாலை நேரங்களில் போதிய வெளிச்சமில்லாத சூழலில், போட்டி முன்னதாக முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் வீச முடியாமல் போகலாம்.
இதைத் தவிர்க்கும் வகையில், வெளிச்சம் இல்லாத நேரங்களில் பகலிரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் 'பிங்க்' பந்து (இளஞ்சிகப்பு) உபயோகப்படுத்த அனுமதி தந்துள்ளது. போட்டி துவங்கும் முன் இரு அணிகள் ஒப்பந்தம் செய்து கொண்டால், மின்னொளியில் இம்முறையை பின்பற்றலாம்.
அதேபோல, ஒருநாள், 'டி-20' போட்டிகளின் தேநீர் இடைவேளையின் போது, அணியின் பயிற்சியாளர்கள் மைதானத்துக்குள் சென்று, வீரர்களுடன் ஆலோசிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்கு முன் கிரிக்கெட் லீக் தொடரில் இது நடைமுறையில் உள்ளது.
