/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சாய் சுதர்சன் அரைசதம் * இந்திய 'ஏ' அணி திணறல்
/
சாய் சுதர்சன் அரைசதம் * இந்திய 'ஏ' அணி திணறல்
ADDED : செப் 24, 2025 08:53 PM

லக்னோ: லக்னோ போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 194 ரன்னில் சுருண்டது. சாய் சுதர்சன் அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி, அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா நான்கு நாள்) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டி லக்னோவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 350/9 ரன் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. வேகமாக ரன் சேர்த்த மர்பி, 76 ரன் எடுத்து அவுட்டானார். ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 420 ரன் குவித்தது. இந்தியா சார்பில் மானவ் 5, பிரார் 3 விக்கெட் சாய்த்தனர்.
சுதர்சன் ஆறுதல்
இந்திய 'ஏ' அணிக்கு லோகேஷ் ராகுல் (11), ஜெகதீசன் (38) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. 'மிடில் ஆர்டரில்' தேவ்தத் படிக்கல், கேப்டன் துருவ் ஜுரல், நிதிஷ் குமார் தலா 1 ரன்னில் அவுட்டாக, 75/5 ரன் என திணறியது இந்தியா. ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் அரைசதம் அடித்தார்.
படோனி 21 ரன்னில் அவுட்டாக, பிரசித் கிருஷ்ணா (16), 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார். சுதர்சன் 75 ரன்னில் அவுட்டானார். இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 194 ரன்னில் சுருண்டு, 226 ரன் பின்தங்கியது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய 'ஏ' அணியின் கான்ஸ்டாஸ் (3), கேம்ப்பெல் (0), ஆலிவர் (1) நிலைக்கவில்லை. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 16/3 ரன் எடுத்து, 242 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
டெஸ்ட் வேண்டாம்
இந்திய 'ஏ' அணி கேப்டனாக இருந்த ஷ்ரேயஸ், இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை. இவர், 'முதுகு வலி காரணமாக, முதல் தர, டெஸ்ட் போட்டிகளில் இருந்து தற்காலிக ஓய்வு எடுக்க விரும்புகிறேன். வரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் எனது பெயரை பரிசீலிக்க வேண்டாம்,' என இந்திய கிரிக்கெட் போர்டிடம் தெரிவித்துள்ளார். அடுத்து பெங்களூரு செல்லவுள்ள இவர், இதிலிருந்து மீண்டு வரத் தேவையான பயிற்சிகளில் ஈடுபட உள்ளார்.