இந்திய அணிக்கு இமாலய வெற்றி: 'சுழலில்' சுருண்டது ஆப்கன்
இந்திய அணிக்கு இமாலய வெற்றி: 'சுழலில்' சுருண்டது ஆப்கன்
UPDATED : ஜூன் 08, 2026 10:34 PM
ADDED : ஜூன் 08, 2026 03:38 PM

புதிய சண்டிகர்: மானவ் சுதார், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்ட 'சுழல்' படை அசத்த, இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 300 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்றியது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, புதிய சண்டிகரில் (பஞ்சாப்) உள்ள மஹாராஜா யதவிந்திர சிங் மைதானத்தில் நடந்தது. கேப்டன் சுப்மன் கில், ராகுல் சதம் விளாச, இந்திய அணி முதல் இன்னிங்சை 564/8 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், ஆப்கானிஸ்தான் அணி 113/5 ரன் எடுத்து, 451 ரன் பின்தங்கியிருந்தது.
மானவ் 6 விக்.,: மூன்றாவது நாள் ஆட்டத்தில் தனிநபராக போராடிய ரஹமத் ஷா அரைசதம் கடந்தார். பின் ரஹமத் ஷா (60), முகமது சலீமை (0) அவுட்டாக்கிய மானவ் சுதார், அறிமுக போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 152 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 412 ரன் பின்தங்கிய நிலையில், 'பாலோ-ஆன்' கொடுக்கப்பட்டது.
சபாஷ் வாஷிங்டன்: தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய 'சுழலில்' சரிந்தது. குல்தீப் பந்தில் குர்பாஸ் (24) அவுட்டானார். வாஷிங்டன் வலையில் ரஹ்மத் ஷா (13), கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி (5), செதிக்குல்லா (42) சிக்கினர். மானவ் சுதார் பந்தில் அப்சர் (8) கிளம்பினார். ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 112 ரன்னுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது.
இந்தியா சார்பில் வாஷிங்டன் 4, குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினர்.
7 விக்கெட் அதிசயம்
அறிமுக டெஸ்டில் சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர்களில் மானவ் சுதார் (6/33, எதிர், ஆப்கன், புதிய சண்டிகர், 2026) இரண்டாவது இடம் பெற்றார். முதலிடத்தில் நரேந்திர ஹிர்வானி (8/61, எதிர், வெ.இ., 1988, சென்னை) உள்ளார்.
* அறிமுக போட்டியில் 5+ விக்கெட் சாய்த்த 10வது இந்திய பவுலரானார் மானவ் சுதார்.
* இந்த நுாற்றாண்டில் அறிமுக டெஸ்டில் 5 விக்கெட் சாய்த்த 2வது இந்திய பவுலர் மானவ். இதற்கு முன் அமித் மிஸ்ரா (5/71, எதிர், ஆஸி., 2008) சாதித்து இருந்தார்.
* ராஜஸ்தானை சேர்ந்த இடது கை 'ஸ்பின்னரான' மானவ் சுதார், 23, இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட் (6/33, 1/29) சாய்த்தார். முதல் இன்னிங்சில் 28 ரன் எடுத்த இவர், ஆட்ட நாயகன் விருதை வென்றார். அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், ரவிந்திர ஜடேஜாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.
இது சிறந்தது
இந்திய அணி டெஸ்ட் அரங்கில் தனது 'மெகா' வெற்றியை (இன்னிங்ஸ், 300 ரன்) நேற்று பதிவு செய்தது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக இன்னிங்ஸ், 272 ரன் வித்தியாசத்தில் (ராஜ்கோட், 2018) வென்றிருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் சிறந்த வெற்றியாக அமைந்தது. முன்னதாக 2018ல் ஆப்கனை இன்னிங்ஸ், 262 ரன் (2018, பெங்களூரு) வித்தியாசத்தில் வீழ்த்தியது.
* டெஸ்டில் ஆப்கானிஸ்தான் தனது 3வது குறைந்தபட்ச ஸ்கோரை (2வது இன்னிங்சில் 112 ரன்) பெற்றது.
