தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தேறாத சென்னை அணி பந்துவீச்சு: தொடர்ந்து இரண்டாவது தோல்வி

தேறாத சென்னை அணி பந்துவீச்சு: தொடர்ந்து இரண்டாவது தோல்வி

தேறாத சென்னை அணி பந்துவீச்சு: தொடர்ந்து இரண்டாவது தோல்வி


ADDED : ஏப் 04, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 12:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை அணியின் பவுலர்கள் சொதப்ப, 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ஆயுஷ் அபாரம்: சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் (7) மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த ஆயுஷ் மாத்ரே, பார்ட்லெட் வீசிய 4வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார். அர்ஷ்தீப் சிங் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஆயுஷ், ஸ்டாய்னிஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி, 29 பந்தில் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்த போது சகால் 'சுழலில்' ருதுராஜ் (28) சிக்கினார். வைஷாக் 'வேகத்தில்' ஆயுஷ் (73 ரன், 43 பந்து, 5X6, 6X4) வெளியேறினார்.

சபாஷ் சர்பராஸ்: கார்த்திக் சர்மா (1) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஷிவம் துபே, சர்பராஸ் கான் ஜோடி கைகொடுத்தது. அர்ஷ்தீப் வீசிய 15வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய சர்பராஸ் கான், விஜயகுமார் வைஷாக் வீசிய 17வது ஓவரில் வரிசையாக 3 பவுண்டரி அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 38 ரன் சேர்த்த போது வைஷாக் பந்தில் சர்பராஸ் (32) அவுட்டானார். பார்ட்லெட் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த துபே, அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரி அடித்தார்.

சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது. துபே (45), பிரஷாந்த் வீர் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

நல்ல துவக்கம்: சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சென்னை பவுலர்கள் சொதப்பினர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஆர்யா, மாட் ஹென்றி வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மறுமுனையில் அசத்திய பிரப்சிம்ரன் சிங், அன்ஷுல் கம்போஜ் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது ஹென்றி 'வேகத்தில்' ஆர்யா (39 ரன், 11 பந்து, 4X6, 3X4) போல்டானார். பிரப்சிம்ரன் சிங் (43) 'ரன்-அவுட்' ஆனார்.

ஷ்ரேயஸ் அரைசதம்: நுார் அகமது, கம்போஜ் ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டிய கூப்பர் கொனாலி 22 பந்தில் 36 ரன் விளாசினார். பின் இணைந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், நேஹல் வதேரா ஜோடி நம்பிக்கை தந்தது. ராகுல் சகார் வீசிய 13வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட ஷ்ரேயஸ், கம்போஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 26 பந்தில் அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த போது கம்போஜ் பந்தில் ஷ்ரேயஸ் (50 ரன், 29 பந்து, 3X6, 4X4) அவுட்டானார்.

வதேரா (10) நிலைக்கவில்லை. ஹென்றி வீசிய 18வது ஓவரில் ஸ்டாய்னிஸ், சஷாங்க் சிங் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். கம்போஜ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்டாய்னிஸ் வெற்றியை உறுதி செய்தார். பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 210/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சஷாங்க் (14), ஸ்டாய்னிஸ் (9) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் கம்போஜ், ஹென்றி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

இரண்டாவது முறை

சென்னை 'லெவன்' அணியில் ஆயுஷ் மாத்ரே (18 ஆண்டு, 261 நாள்), கார்த்திக் சர்மா (19 ஆண்டு, 342 நாள்), பிரஷாந்த் வீர் (20 ஆண்டு, 130 நாள்), நுார் அகமது (21 ஆண்டு, 90 நாள்) என 4 இளம் வீரர்கள் இடம் பெற்றனர். இரண்டாவது முறையாக, 21 அல்லது அதற்கும் குறைந்த வயதுடைய 4 வீரர்கள் சென்னை 'லெவன்' அணியில் இடம் பிடித்தனர்.

தொடரும் சோகம்

சென்னை அணியில் சஞ்சு சாம்சன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இவர், தொடர்ந்து சொதப்புகிறார். ராஜஸ்தானுக்கு எதிராக 6 ரன்னில் அவுட்டான இவர், பஞ்சாப்பிடம் 7 ரன்னில் வெளியேறினார். அடுத்து வரும் போட்டிகளில் இவர், எழுச்சி பெறாவிட்டால் சென்னை அணிக்கு சிக்கலாகிவிடும்.

பீல்டிங் சொதப்பல்

பஞ்சாப் அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. ஆயுஷ் மாத்ரே 59, 67 ரன் எடுத்திருந்த போது கொடுத்த 'கேட்ச்' வாய்ப்புகளை முறையே வைஷாக், சஷாங்க் சிங் வீணடித்தனர்.

இளம் வீரர்

இத்தொடரில் 19 வயதுக்கு முன், ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த இளம் வீரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார் ஆயுஷ் மாத்ரே (73). முதலிரண்டு இடங்களில் ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி (14 ஆண்டு, 32 நாள், 101 ரன், எதிர்: குஜராத், 2025), ஆயுஷ் (17 ஆண்டு, 291 நாள், 94 ரன், எதிர்: பெங்களூரு, 2025) உள்ளனர்.

* இத்தொடரில் 19 வயதுக்கு முன், அதிக முறை ஒரு இன்னிங்சில் 50+ ரன் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை (தலா 2 முறை) பார்த்திவ் படேலுடன் பகிர்ந்து கொண்டார் ஆயுஷ். முதலிடத்தில் வைபவ் சூர்யவன்ஷி (3 முறை) உள்ளார்.

* சேப்பாக்கம் மைதானத்தில் அரைசதம் விளாசிய இளம் வீரரானார் ஆயுஷ் (18 ஆண்டு, 261 நாள்).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us