ADDED : மே 07, 2026 09:49 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் (எதிர், பாக்., மே 30, ஜூன் 2, 4) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முன்னணி ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர், இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வருவதால், ஒருநாள் தொடரில் பங்கேற்பது சந்தேகம்.
தற்போதுள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-3' இடத்தில் உள்ள ஐதராபாத், பஞ்சாப், பெங்களூரு அணிகள் சார்பில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கூப்பர் கொனாலி, சேவியர் பார்ட்லெட், ஜோஷ் ஹேசல்வுட், டிம் டேவிட் விளையாடுகின்றனர். மற்ற அணிகளில் மிட்சல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ் (லக்னோ), மாத்யூ ஷார்ட் (சென்னை), ஸ்டார்க் (டில்லி), கேமரான் கிரீன் (கொல்கட்டா) உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், கிரிக்கெட் லீக் போட்டியில் தொடர்ந்து விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) அனுமதி வழங்கியது. மற்றவர்கள் ஒருநாள் தொடரில் பங்கேற்பர்.
பேட்டர்களை சமாளிப்பது எப்படி
லக்னோ: கிரிக்கெட் லீக் தொடரில் பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எதிரணி நிர்ணயிக்கும் எந்த ஒரு இலக்கையும் எளிதாக 'சேஸ்' செய்கின்றனர். சமீபத்தில் டில்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 265 ரன்னை 'சேஸ்' செய்தது. ஐதராபாத் (229/5, எதிர்: ராஜஸ்தான், 249/4, எதிர்: மும்பை), ராஜஸ்தான் (228/2, எதிர்: பஞ்சாப்), டில்லி (226/3, எதிர்: ராஜஸ்தான்) உள்ளிட்ட அணிகளும் அதிக ரன்னை 'சேஸ்' செய்து வெற்றி கண்டன.
பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி என பெங்களூரு அணியின் 'ஆல்-ரவுண்டர்' குர்ணால் பாண்ட்யா கூறுகையில், ''கடந்த 10 சீசனில் நடந்த போட்டிகளை கவனித்தால், பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்துவது நன்றாக தெரியும். இத்தொடரில் அறிமுகமாகும் இளம் வீரர்கள் கூட மிகவும் எளிதாக சிக்சர், பவுண்டரி விளாசி ரன் சேர்க்கின்றனர். பேட்டர்களை சமாளிக்க பவுலர்கள் ஒருபடி அதிகமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பந்துவீசும் முறையில் நிறைய வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப, பந்துவீச்சில் மாற்றம் செய்தால் எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தலாம்,'' என்றார்.
பும்ரா சொதப்புவது ஏன்
புதுடில்லி: கிரிக்கெட் லீக் 19வது சீசனில் மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தடுமாறுகிறார். இதுவரை விளையாடிய 10 போட்டியில், 3 விக்கெட் மட்டும் கைப்பற்றினார். மறுமுனையில் 'வேகத்தில்' அசத்தி வரும் பெங்களூரு அணியின் புவனேஷ்வர் குமார், 10 போட்டியில், 17 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் கூறுகையில், ''புவனேஷ்வர் போட்டியில் திட்டமிட்டு விளையாடுகிறார். 'பவர்-பிளே', 'டெத்' ஓவரில் மட்டும் பவுலிங் செய்கிறார். இதனால் அவரால் நிறைய விக்கெட் வீழ்த்த முடிகிறது. ஆனால் இந்த சீசனில் பும்ரா, பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறார். சில நேரம் 'பவர்-பிளே' ஓவரில் பவுலிங் செய்யும் பும்ரா, சில சமயம் போட்டியில் நெருக்கடி இல்லாத நேரத்தில் பந்துவீசுகிறார். இது, அவரது செயல்பாட்டை பாதிக்கிறது. இந்த சீசனில் ஏமாற்றி வரும் ரிஷாப் பன்ட் தலைமையிலான லக்னோ அணி, சிறந்த 'லெவன்' அணியை கண்டறிய முடியாததால் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை. சிறந்த பேட்டராக பன்ட் எழுச்சி பெற வேண்டும். இம்முறை பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்,'' என்றார்.
