/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகருக்கு வெளியே அன்னதான திட்டம்... செயல்படுத்தப்படுமா? காமராஜ் நகர் தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு
/
நகருக்கு வெளியே அன்னதான திட்டம்... செயல்படுத்தப்படுமா? காமராஜ் நகர் தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு
நகருக்கு வெளியே அன்னதான திட்டம்... செயல்படுத்தப்படுமா? காமராஜ் நகர் தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு
நகருக்கு வெளியே அன்னதான திட்டம்... செயல்படுத்தப்படுமா? காமராஜ் நகர் தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 08, 2026 01:20 AM

புதுச்சேரி, : காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை, பொதுமக்களுக்கு இடையூறாக சாப்பாடு போடும் இடமாக மாற்றுவதை, அத்தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கைவிட வேண்டும். காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், வெங்கட்டா நகர் பூங்காவுக்கு அருகில் அமைந்து ள்ளது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக ஏற்கனவே இருந்த ஜான்குமார், தேர்தலை மனதில் கொண்டு மக்களை கவரும் வகையில் மதிய நேரத் தில் சாப்பாடு போடும் திட்டத்தை எம்.எல்.ஏ., அலுவலகத்திலேயே துவக்கினார்.
தற்போது, காமராஜர் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோஸ் சார்லஸ் மார்டினும், ஜான்குமார் பாணியில் மீண்டும் சாப்பாடு வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த 45 அடி சாலையில் அமைந்துள்ளது. இரவு, பகல் என 24 மணி நேரமும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலாக இருப்பது வழக்கம். எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இலவசமாக சாப்பாடு வழங்கப்பட்டதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் சாப்பிடுவதற்காக 45 அடி சாலையை நோக்கி காலையிலேயே கும்பல் கும்பலாக சாலையில் நின்றதாலும், வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதாலும், 45 அடி சாலை வழியாக இருசக்கர வாகனத்தில்கூட செல்ல முடியாத அளவிற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இலவசமாக உணவு கிடைப்பதால், புதுச்சேரி முழுதும் உள்ள பிச்சைக்காரர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் நன்றாக சாப்பிட்ட பின் வெங்கட்டா நகர் பூங்காவிலேயே படுத்து துாங்கினர்; சாலையோரங்களில் இயற்கை உபாதைகள் கழித்து அசுத்தமாக்கினர். இதனால் இப்பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியானது.
மேலும், சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள உணவு பொருட்களை சாலையில் வீசி எறிந்ததால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தெரு நாய்கள் படையெடுத்தன. பல நேரங்களில் சாலையில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கவும் செய்தன.
அருகில் உள்ள பூங்காவில் தெரு நாய்கள் தஞ்சம் அடைந்ததால் வாக்கிங் செல்ல முடியாமலும், பொழுதுபோக்க முடியாமலும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், சுதந்திர பொன்விழா நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் எலி தொல்லையும் அதிகரித்தது. குப்பையில் கொட்டப்படும் உணவு பொருட்களை சாப்பிடும் எலிகளால் சுகாதார சீர்கேடு தலை துாக்கியது. மேலும், பன்றிகளும் படையெடுக்க துவங்கின.
ஏழைகள் பசியாற உணவு வழங்குவது உன்னதமான காரியம் தான்; இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், குடியிருப்புகள் நிறைந்த, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இடையூறாக சாப்பாடு போடக் கூடாது.
அன்னதானம் வழங்குவதில் யாருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ யாரும் இடையூறாக இருக்கக் கூடாது.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அன்னதானம் செய்ய விரும்பினால், நகருக்கு வெளியே ஒரு மண்டபத்தை விலைக்கு வாங்கி, பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் அன்னதானம் வழங்கலாம். இதற்கு தேவையான வசதி வாய்ப்புகள் ஜோஸ் சார்லஸ் மார்டினிடம் நிச்சயமாக இருக்கிறது. அப்படி செய்தால் அனைவருமே வாழ்த்தி வரவேற்பர்.
போக்குவரத்து நெரிசலிலும், சுகாதார சீர்கேட்டிலும் விழிபிதுங்கி நிற்கும் மக்களின் கஷ்டத்தை உணர்ந்து, அன்னதானத் திட்டத்தை சரியான முறையில், மாற்று இடத்தில் செயல்படுத்த ஜோஸ் சார்லஸ் மார்டின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

