/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க போவது...யார் 30 தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணிக்கை: 11 மணிக்கே மக்களின் தீர்ப்பு தெரிந்துவிடும்
/
புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க போவது...யார் 30 தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணிக்கை: 11 மணிக்கே மக்களின் தீர்ப்பு தெரிந்துவிடும்
புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க போவது...யார் 30 தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணிக்கை: 11 மணிக்கே மக்களின் தீர்ப்பு தெரிந்துவிடும்
புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க போவது...யார் 30 தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணிக்கை: 11 மணிக்கே மக்களின் தீர்ப்பு தெரிந்துவிடும்
UPDATED : மே 03, 2026 10:18 PM
ADDED : மே 03, 2026 07:11 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையின் 30 இடங்களுக்கான தேர்தல் திருவிழா கிளைமாக்சை எட்டியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகாலம் தங்களை வழி நடத்தே போகும் மக்களின் தீர்ப்பினை ஓட்டு எண்ணிக்கையின் மூலம் தேர்தல் துறை அறிவிக்க உள்ளது.
புதுச்சேரி சட்டசபைக்கு 30 எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்ய கடந்த மாதம் 9ம் தேதி நடந்த தேர்தல் ஜனநாயக திருவிழாவில் 34 தேசியக் கட்சி வேட்பாளர்கள், 63 மாநிலக் கட்சி வேட்பாளர்கள், 80 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் 117 சுயேட்சைகள் என, மொத்தம் 294 வேட்பாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்கினர்.
தேர்தல் நாளன்று 30 தொகுதிகளுக்காக 1099 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், அதே எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வி.வி.பாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தபால் ஓட்டுகள் 1.36 சதவீதம், மின்னணு ஓட்டு பதிவு 89.87 சதவீதம் என, 91.23 சதவீத ஓட்டு பதிவாகி, இமாலய சாதனையாக அமைந்தது.
பலத்த பாதுகாப்பு...: புதுச்சேரி பிராந்தியத்தின் 23 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் தாகூர் கல்லுாரி, மோதிர்லால் நேரு பாலிடெக்னிக் மற்றும் மகளிர் பொறியியல் கல்லுாரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள மூன்று ஓட்டு எண்ணிக்கை மையங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
காரைக்கால் பிராந்தியத்தின் 5 தொகுதிகளுக்கான ஓட்டுகள் அண்ணா கல்லுாரியிலும், மாகி பிராந்திய ஓட்டுகள் ஜவகர்லால் நேரு அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஏனாம் பிராந்திய ஓட்டுகள் எஸ்.ஆர்.கே., அரசு கல்லுாரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. கடந்த ஒரு மாதமாக இந்த மையங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வந்தன.
முதலில் தபால்: கடந்த 25 நாட்களாக நீடித்திருந்த எதிர்பார்ப்பு இன்று ஓட்டு எண்ணிக்கை மூலம் உச்சிக்குச் செல்கிறது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்நோக்கும் இன்றைய கிளைமாக்ஸ் நாள், புதுச்சேரியின் அடுத்த ஐந்து ஆண்டுகால அரசியல் திசையை நிர்ணயிக்க உள்ளது.
முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணிக்கை துவங்குகிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை ஆரம்பமாகிறது.
முதல் சுற்று:: தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை இரு கட்டங்களாக பிரித்து எண்ணப்படுகிறது. முதல் கட்டத்தில் 17 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்படும். அதில் மண்ணாடிப்பட்டு, ஊசுடு, வில்லியனூர், கதிர்காமம், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, மாகே, ஏனாம் தொகுதிகள் அடங்கும். இத்தொகுதிகளின் முடிவுகள் மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள் வெளியாகும்.
இரண்டாம் சுற்று:: இரண்டாம் கட்டத்தில் மீதமுள்ள 13 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்படும். அதில், திருபுவனை, மங்கலம், உழவர்கரை, இந்திரா நகர், காமராஜ் நகர், காலாப்பட்டு, ராஜ்பவன், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்படும். இவற்றின் முடிவுகள் மாலை 3:30 மணி முதல் 5:30 மணிக்குள் வெளிவரும்.
இந்த தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., - ல.ஜ.க., ஒரு அணியாகவும், காங்., - தி.மு.க,. கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கின. மேலும் த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தனியாக போட்டியிட்டுள்ளன. நான்கு முனைப் போட்டியாக அமைந்துள்ள இந்த தேர்தலில், யார் ஆட்சி கட்டிலை பிடிக்கப் போகின்றனர் என்ற பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
எந்த கூட்டணி ஆட்சியை அமைக்கும். யார் எதிர்க்கட்சியாக அமர்வர். புதிய முகங்கள் எத்தனை பேர் சட்டசபைக்கு செல்வர். பழைய அரசியல்வாதிகள் தங்களது நிலையை தக்க வைத்துக் கொள்கிறார்களா? இத்தனை கேள்விகளுக்கும் இன்று பதில் கிடைக்கும்.

