அனுமதியின்றி விஜய் 'ரோடு ஷோ' த.வெ.க., தொண்டர்கள் மீது தடியடி
அனுமதியின்றி விஜய் 'ரோடு ஷோ' த.வெ.க., தொண்டர்கள் மீது தடியடி
ADDED : ஏப் 05, 2026 03:58 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், பிரச்சாரத் திற்கு வந்த த.வெ.க., தலைவர் விஜய், அனுமதியின்றி, 'ரோடு ஷோ' நடத்தினார். இதில், கட்டுக்கடங்காமல் குவிந்த அக்கட்சியின் தொண்டர்களை போலீசார், தடியடி நடத்தி கலைத்தனர்.
புதுச்சேரியில், த.வெ.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, த.வெ.க., தலைவர் விஜய், நேற்று பிரச்சாரம் செய்தார்.
தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி, வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம், தவளக்குப்பம் சந்திப்பு மற்றம் கூடப்பாக்கம் நான்கு முனை சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணிக்குள் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், விஜய் ரோடு ஷோ நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரிக்கு நேற்று காலை, 9:30 மணிக்கு வந்த விஜய், மாநில எல்லையான கனகசெட்டிகுளத்தில், தன் காரிலிருந்து இறங்கி, பிரச்சார வேனில் ஏறினார்.
அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பெண்கள், பொதுமக்கள், விஜய் பிரச்சார வாகனத்தை சூழ்ந்தனர்.
இதனால், வாகனம் நகர முடியவில்லை. பிரச்சார வாகனத்தின் மீது விஜய் ஏறி நின்று, கை அசைத்தபடி வழிவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
வாகனம், கருவடிகுப்பத்திலிருந்து தட்டாஞ்சாவடி நோக்கி வந்தபோது, சாலையின் இருபுறமும் வாகனமே நகர முடியாத அளவுக்கு தொண்டர்கள் குவிந்தனர்.
அவர்களை அகற்ற முடியாமல், போலீசாரும், பவுன்சர்களும் திணறினர். சாலையோரம் தர்ப்பூசணி பழத்துடன் நின்றிருந்த ஒருவர், பழத்தை விஜய் வாகனத்திற்குள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டம் கட்டுக்கடங்காததை தொடர்ந்து, போலீசார், லேசான தடியடி நடத்தினர். அதனால், தொண்டர்கள் சிதறி ஓடினர். பின், வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். நீண்ட நேரத்திற்கு பின், காலை, 11:52 மணிக்கு, தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பிரச்சார திடலுக்கு, விஜய் வந்து சேர்ந்தார்.
அப்போது, விஜய் பேசும் போது, இடைவிடாமல் விசில் அடித்தபடி இருந்தனர். விஜய் பேசி முடித்து கிளம்பியதும் , அவரை வாகனங்கள் பின் தொடர்ந்து செல்லாத வகையில், போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பாதுகாப்பு பணியில், உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர். கர்ப்பிணியர், முதியவர்கள், குழந்தை களை, போலீசார் தடுத்து நிறுத்தி, நெரிசல் இல்லாத பாதுகாப்பான இடத்தில் நிற்க அறிவுறுத்தி, அனுப்பினர்.
