ADDED : மே 26, 2026 03:46 AM

புதுச்சேரி: சஞ்சீவிநகர் திரவுபதியம்மன் கோவில் பிரமோற்சவத்தையொட்டி நேற்று தீமிதி திருவிழா நடந்தது.
உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சஞ்சீவிநகர் கிராமத்தில் சஞ்சீவி விநாயகர், செங்கழுநீரம்மன், திரவுபதியம்மன், கெங்கையம்மன் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.
இக்கோவில் பிரமோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 19ம் தேதி மாலை 6;00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது.
அதனை தொடர்ந்து 20ம் தேதி அரக்கு மாளிகை கொளுத்துதல், இரவு 7;00 மணிக்கு மாரியம்மனுக்கு கும்பம் கொட்டுதலும், 21ம் தேதி மாலை 7;00 மணிக்கு பகாசூரனுக்கு அன்னம் அளித்தல், 22ம் தேதி இரவு அர்சுனனுக்கும், திரவுபதியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
அதனை தொடர்ந்து 23ம் தேதி, 24ம் தேதிகளில் இரவு 10;00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மாலை 6;00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
