/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிசம்பர் மாதத்துடன் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்... விடைபெறுகிறது; கணக்குகளை ஒப்படைக்க கமிட்டி உத்தரவு
/
டிசம்பர் மாதத்துடன் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்... விடைபெறுகிறது; கணக்குகளை ஒப்படைக்க கமிட்டி உத்தரவு
டிசம்பர் மாதத்துடன் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்... விடைபெறுகிறது; கணக்குகளை ஒப்படைக்க கமிட்டி உத்தரவு
டிசம்பர் மாதத்துடன் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்... விடைபெறுகிறது; கணக்குகளை ஒப்படைக்க கமிட்டி உத்தரவு
ADDED : செப் 23, 2025 07:05 AM

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டம் இறுதி கட்டமாக, டிசம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதுடன்,அடுத்தாண்டு மார்ச்சுக்குள் கணக்குகளையும் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களை தேர்வு செய்து அங்கு அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் 2015-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் மூன்றாம் கட்டத்தில் புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு கடந்த 2017ல் அனுமதி கொடுத்தது.
அதன்படி, புதுச்சேரி நகர பகுதியில் 1468 ஏக்கர் பரப்பளவில் திட்ட மதிப்பீடு 1,828 கோடி ரூபாயில் பணிகள் நடக்க வேண்டும்.குறிப்பாக தடையில்லா மின்சாரம், சுத்தமான குடிநீர், கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக செல்லுதல், குப்பையில்லா நகரம், மின்விளக்குகளால் ஒளிர செய்தல், கண்காணிப்பு கேமரா, நடைபாதை மேம்பாடு பணிகள்தான் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம்.
ஆனால், புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கேள்விகுறியாகவும், கேலிகூத்தாகவும் மாறியது. 1,828 கோடி ரூபாய்க்கு திட்டம் போடப்பட்டு, அத்திட்டம் ரூ.618 கோடியுடன் சுருங்கியது. இம்மாதம் 31ம் தேதியுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
இருப்பினும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் இன்னும் முடிக்காத நிலையில், இந்த திட்டத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்க ஸ்மார்ட் சிட்டி குழு முடிவு செய்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கணக்கு வழக்குகளையும் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே டிசம்பர் மாதத்துடன் முழுவதுமாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் விடைபெறுகிறது.
புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை பொருத்தவரை, ரூ.618 கோடியில் 82 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 72 திட்ட பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் 8 திட்ட பணிகள் முடியவில்லை. இந்த 8 திட்டப் பணிகளும் ரூ.250 கோடிக்கு பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு, இதில் 175 கோடி ரூபாய்க்கு இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
எனவே, முடிக்கப்படாமல் உள்ள இந்த 8 திட்ட பணிகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக 80 பணிகள் டிசம்பர் மாதத்தில் நிறைவு பெற்றிருக்கும். மீதமுள்ள இரண்டு பணிகளில் மூன்றாம் நபர் ஆய்வு பணியும், கடலுார் ரயில்வே மேம்பால பணியும் மிக முக்கியமானவை.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை பொருத்தவரை, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய திட்ட பணிகள் ஏதும் எடுத்து கொள்ளப்படாது; கூடுதலாக நிதியும் தர முடியாது. மாநில அரசுகள் விரும்பினால் திட்ட பணிகள் காலக்கெடுவை நீட்டித்து எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அறிவித்த மாதிரியே அதன் பிறகு புதிதாக திட்டங்களுக்கு அனுமதியும் தரவில்லை. நிதியும் தரவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரிய மார்க்கெட், மரப்பாலம் மேம்பாலம், பல அடுக்கு பார்க்கிங், இ.சி.ஆர் .,மார்க்கெட் என பிரமாண்டமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் போதுமான திட்டமிடல், ஒத்துழைப்பு இல்லாமல் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் காணல் நீராகவே மாறி, ஸ்மார்ட் சிட்டி திட்டமும் விடைபெறுகிறது.