ADDED : ஜூன் 19, 2026 05:03 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சோம்பட்டில் நடந்து வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை, ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, சோம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் கான்கிரீட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியினை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் நமச்சிவாயத்திடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தலின் பேரில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சோம்பட்டில் நடந்து வரும் சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, ஆணையர் எழில்ராஜன், ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என, அறிவுறுத்தினார். சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
