ADDED : ஏப் 22, 2026 11:02 PM
புதுச்சேரி: பயிற்சியாளரை தாக்கிய புதுச்சேரி முதல்தர கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் சையது முஷ்தாக் அலி 'டி-20' டிராபி தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2025 சீசனுக்கான புதுச்சேரி அணி தேர்வில் சில வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
இதற்கு, புதுச்சேரி 19 வயது அணி பயிற்சியாளர் வெங்கட்டராமன் தான் காரணம் என, கடந்த டிச. 8ல், அவர் மீது வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து, கார்த்திகேயன், அரவிந்தராஜ், சந்தோஷ் குமரன் என மூன்று வீரர்கள் மீது, கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, மூன்று வீரர்களை புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. இவர்கள் சி.ஏ.பி.,க்கு சொந்தமான எந்த மைதானத்திலும் நுழைய, பயிற்சி உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டர். வழக்கு முடியும் வரை இது தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
