புதுச்சேரிக்கு அமைச்சர்களே வேண்டாம்; காங்., தலைவர் வைத்திலிங்கம் பேட்டி
புதுச்சேரிக்கு அமைச்சர்களே வேண்டாம்; காங்., தலைவர் வைத்திலிங்கம் பேட்டி
UPDATED : ஜூன் 22, 2026 08:38 PM
ADDED : ஜூன் 22, 2026 08:03 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இலாகா மட்டுமல்ல, அமைச்சர்களே வேண்டாம். அனைத்தும் முதல்வர் ரங்கசாமியே பார்த்தக் கொள்வார் என காங்., தலைவர் வைத்திலிங்கம் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று காங்., அலுவலகத்தில் நிருபரிடம் கூறியதாவது;
நீட் தேர்வில் மத்திய அரசின் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தினால் தற்கொலைகள் நிகழ்கிறது. நீட் போன்ற போட்டித் தேர்வுக்கு பெற்றோர்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கோடி செலவு செய்கின்றனர். ஆனால், அரசாங்கம் கல்வித்துறைக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை ரூ.1.4 லட்சம் கோடி தான் செலவு செய்கிறது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் நிறைய முறைகேடு உள்ளது. புதுச்சேரியில், சி.பி.எஸ்.இ., பள்ளியில் அட்மிஷனுக்கு ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை செலாவாகிறது. இது அரசு நிர்ணய தொகையை விட இரு மடங்கு அதிகம். நேற்று ஆரம்பித்த பள்ளிகள் கூட இன்று கோடிக்கணக்கில் கட்டடத்தை கட்டி பெரிய கல்லுாரி நிர்வாகமாக மாறி இருக்கிறது. ஆனால் அங்கு படித்த மாணவர்கள் வேலை தேடி வீதிகளில் அலைந்து கொண்டுள்ளனர்.
தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம். போட்டி காங்., வேட்பாளர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கட்சி தலைமை கூறிவிட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இலாகா மட்டும் அல்ல. அமைச்சர்களே வேண்டாம். முதல்வர் ரங்கசாமியே அனைத்தையும் பார்த்துக் கொள்வார், இதுவரை புதுச்சேரியில் த.வெ.க சார்பில் யாரும் கூட்டணி குறித்து பேசவரவில்லை. அவர்கள் வந்தால் நாங்கள் பேசுவோம் என்றார்.
