அமைச்சரா... எம்.எல்.ஏ.,வா?: சர்ச்சையை கிளப்பும் அரசு சின்னம்
அமைச்சரா... எம்.எல்.ஏ.,வா?: சர்ச்சையை கிளப்பும் அரசு சின்னம்
ADDED : ஜூன் 14, 2026 04:01 AM

வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் தங்கள் கார்களில் 'ரிவாலிங் லைட்' பயன்படுத்த தடை விதித்துள்ளது. இருப்பினும், புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், தங்கள் கார்களில் சுழல் விளக்கு வைக்காவிட்டாலும், 'கெத்து' காட்டுவதற்காக தங்கள் கார்களின் பின்னால், 30 செ.மீ., விட்டத்தில் இந்திய அரசின் லோகோ (சிங்கம்)வை பித்தளையில் பொறுத்தி வைத்துள்ளனர்.
இந்த லோகோவை ஜனாதிபதி, கவர்னர் வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை மீறி பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிங்கம் லோகா பொறித்த கார்கள் 'சிக்னல்'களை கடக்கும் போது, அங்கு பணியில் உள்ள போலீசார் 'சல்யூட்' அடிப்பார்கள். இந்த சிங்கம் லோகோவை தற்போது எம்.எல்.ஏ., ஒருவரும் தனது காரில் வைத்து வலம் வந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து விசாரித்தபோது, தற்போது சிங்கம் லோகோவை தனது காரில் வைத்துள்ள எம்.எல்.ஏ., கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பின், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போதிலும், தனது காரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். பின், தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாகி உள்ளார்.
க டந்த 20ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றதும், அனைவருக்கும் அரசு சார்பில் கார்கள் வழங்கப்பட்டது. அப்போது, அந்த எம்.எல் .ஏ., கடந்தமுறை தான் பயன்படுத்திய காரையே கேட்டு பெற்று, சிங்கம் லோகோவுடன் வலம் வந்து கொண்டுள்ளார். இந்த விதிமீறலை கவர்னர் தான் தடுத்து நிறுத்த வேண்டும்.
