UPDATED : ஜூன் 21, 2026 09:25 PM
ADDED : ஜூன் 21, 2026 09:22 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, முதல் வார இறுதி நாளான ஜூன்
21 ல், பெரிய மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது.
கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசின் உத்தரவின்படி, இந்த ஆண்டிற்கான 61 நாள் மீன் பிடித்தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி துவங்கியது. இதன் காரணமாக, விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைக்காலம் கடந்த 14ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, 15ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, முதல் வார இறுதிநாளான ஜூன்
21ல், புதுச்சேரி, காந்தி வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ள பெரிய மார்க்கெட்டில், மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது.
வஞ்சிரம், சுறா, சங்கரா, பாறை, நெத்திலி, மற்றும் நண்டு, இறால் போன்ற வகைகள் அதிகமாக விற்பனைக்கு வந்தது. கடந்த 2 மாதங்களாக மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் மீன்கள் விலை அதிகமாக இருந்தது.
இந்நிலையில் மீன்கள் வரத்தால் விலை குறைய துவங்கியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். இதேபோல், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளிலும் மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர்.
