/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1 கோடி போலி மருந்து பறிமுதல்; புதுச்சேரியில் கம்பெனிக்கு 'சீல்' : மத்திய மருந்து தர ஆய்வு அதிகாரிகள் அதிரடி
/
ரூ.1 கோடி போலி மருந்து பறிமுதல்; புதுச்சேரியில் கம்பெனிக்கு 'சீல்' : மத்திய மருந்து தர ஆய்வு அதிகாரிகள் அதிரடி
ரூ.1 கோடி போலி மருந்து பறிமுதல்; புதுச்சேரியில் கம்பெனிக்கு 'சீல்' : மத்திய மருந்து தர ஆய்வு அதிகாரிகள் அதிரடி
ரூ.1 கோடி போலி மருந்து பறிமுதல்; புதுச்சேரியில் கம்பெனிக்கு 'சீல்' : மத்திய மருந்து தர ஆய்வு அதிகாரிகள் அதிரடி
ADDED : செப் 03, 2025 09:05 AM

புதுச்சேரி; புதுச்சேரியில் மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பு நடத்திய அதிரடி சோதனையில், ரூ. 1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலி மாத்திரை தயாரித்த கம்பெனிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் போலி மருந்துகள் விற்பதாக வந்த புகாரையடுத்து, மத்திய மருந்து தர ஆய்வு அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தி போலி மருந்துகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், போலி மருந்துகள் புதுச்சேரியில் இருந்து கொள்முதல் செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில், மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பின் மருந்துகள் ஆய்வாளர்கள் சக்திவேல், தேவகிரி, புஷ்பராஜ் புதுச்சேரி வந்தனர். அவர்கள், புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் இந்துமதி, ஜெனிபர் அன்பரசி, கிராம நிர்வாக அதிகாரிகள் அன்பரசன், உமா, மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்த் மற்றும் போலீசாருடன் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 'அம்பாள் கோல்டன் கேப்சூல்' என்ற ஆயூர்வேத மருந்து கம்பெனியில் நள்ளிரவு 12:00 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர். அதில் உரிமம் இன்றி தயாரித்து வைத்திருந்த ரூ. 99 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள போலி மாத்திரைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில், இந்த போலி மாத்திரைகள் புதுச்சேரி, பிச்சைவீரான்பேட்டையில் உள்ள 'நேச்சுரல் கேப்சுல் பிரைவேட் லிமிடெட்', நிறுவனத்திலிருந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த 'நெபுலே பார்மசியூட்டிகல்ஸ்' மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 'பேபுலஸ் லைப் சயின்சஸ்' மூலம் தயாரித்து, பிரைமரி பேக்கிங் செய்யப்பட்ட மாத்திரைகள், அலுமினிய பாயில்கள் மற்றும் அட்டை பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக புதுச்சேரி மருந்து தர கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து, பறிமுதல் செய்த மாத்திரை உள்ளிட்ட பொருட்களை நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலி மாத்திரை தயாரித்த மேட்டுப்பாளையத்தில் உள்ள 'அம்மன் கோல்டன் கேப்சூல்' கம்பெனியை, சப் கலெக்டர் ரிஷிதா ரதி நேற்று இரவு பார்வையிட்டார். பின்னர், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், கம்பெனியில் இருந்த ஆய்வுக்கூடம் உள்ளிட்ட இடங்களை சோதனையிட்டனர். பின்னர் மின் இணைப்புகளை துண்டித்தனர். அதனைத் தொடர்ந்து, வி.ஏ.ஓ.,க்கள் அன்பரசன், உமா ஆகியோர் முன்னிலையில் கம்பெனியை பூட்டி 'சீல்' வைத்தனர்.
இதுகுறித்து புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இந்துமதி கூறுகையில், உரிமம் இன்றி மருந்து உற்பத்தி செய்ததால், கோர்ட் உத்தரவின்படி கம்பெனிக்கு 'சீல்' வைத்துள்ளதாக தெரிவித்தார்.