/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., ... வியூகம்: பொதுக்குழு, சிந்தனை அமர்விற்கு ஏற்பாடு
/
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., ... வியூகம்: பொதுக்குழு, சிந்தனை அமர்விற்கு ஏற்பாடு
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., ... வியூகம்: பொதுக்குழு, சிந்தனை அமர்விற்கு ஏற்பாடு
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., ... வியூகம்: பொதுக்குழு, சிந்தனை அமர்விற்கு ஏற்பாடு
ADDED : செப் 15, 2025 02:04 AM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற திட்டமிட்டுள்ள பா.ஜ., இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மாநில நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து, தனி வியூகத்தை வகுக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. தமிழகத்தை போன்றே புதுச்சேரியிலும் கூட்டணியை உறுதி செய்த பா.ஜ., எதிர் வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க புதிய நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
அதிக இடங்களில் வெற்றிபெற திட்டமிட்டுள்ள பா.ஜ., சட்டசபை தேர்தலுக்கு தனி வியூகத்தினை வகுக்க இரண்டு நாள் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இன்று (15ம் தேதி) அண்ணாமலை ஓட்டலில் நடக்கும் சிந்தனை அமர்வு கூட்டத்திற்கு, 40 வல்லுநர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்க உள்ளனர். தொகுதி வாரியாக தொண்டர்களை சந்தித்து மத்திய மற்றும் மாநில அரசின் சாதனைகளை மக்கள் இடையே கொண்டு செல்ல நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது.
அடுத்து, மறுநாள் 16ம் தேதி பழைய துறைமுக வளாகத்தில் மாநில பொதுக்குழுவும் கூடுகிறது. பா.ஜ., தலைவர் மாற்றம், அமைச்சர் மாற்றம், புதிய நியமன எம்.எல்.ஏ.,க்கள், புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் என பல்வேறு மாற்றங்களுடன் இந்த பொதுக்குழு கூட்டப்படுகிறது.
இந்த இரு கூட்டங்களில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, அர்ஜூன்ராம் மேக்வால் கலந்து கொள்கின்றனர். இருவரும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் பொறுப்பாளராகவும், இணை பொறுப்பாளராகவும் உள்ளதால் இரு கூட்டங்களும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளை கட்சி மேலிடத்தில் தெரிவிக்க உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., 16 தொகுதியிலும், பா.ஜ., 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க., 5 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இதில் 6 இடங்களை கைப்பற்றிய பா.ஜ., 3 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு, 3 நியமன எம்.எல்.ஏ.,க்கள் என 12 எம்.எல்.ஏ.,க்களையும், ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை பெற்றுள்ளது.
இது மட்டுமில்லாமல் பல்வேறு தொகுதிகளில் முக்கிய பிரமுகர்களையும் தாமரையுடன் சேர்த்துள்ளது.
எனவே, கடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும் இந்த முறை அதிக தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட வேண்டும் என, நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த குரல் இரு கூட்டங்களிலும் ஓங்கி எதிரொலிக்கும்.