ADDED : செப் 15, 2025 02:10 AM

புதுச்சேரி: 'அரிக்கமேடு ஒரு பிந்தைய காலனித்துவ இந்தியப் பெருங்கடல் வரலாறு மற்றும் தொல்லியல்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது.
பெருங்கடல் வள மையம், மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆசிய ஆய்வு நிறுவனம், இந்திய அரசின் கலாசார அமைச்சகம், புதுச்சேரி அரசின் கலை மற்றும் கலாசாரத் துறை, சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு தலைவர் செல்வகுமார் வரவேற்றார்.
விழாவில் பங்கேற்ற அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது;
அரிக்கமேடு ரோமானியர்களோடு வாணிபத்தையும், கடல் பயணத்தையும் வைத்திருந்தது. உலகளாவிய கடற்கரையாக இருந்துள்ளது. புதுச்சேரியில் பல நுாற்றாண்டுகள் முன்பு வாழ்ந்தோரின் கலைத்திறமையும் இதில் வெளிப்படுகிறது.
அரிக்கமேடு தொடர்பாக பல நிகழ்வுகள் சுற்றுலா வளர்ச்சிக்காக செய்யவுள்ளோம். மத்திய அரசிடம் பேசி 13 ஏக்கர் நிலத்தை புதுச்சேரி அரசு, நிலஆர்ஜிதம் செய்து சுற்றுச்சுவர் எழுப்பி பாதுகாக்க தொடங்கியுள்ளோம். பல அகழ்வாராய்ச்சிகள் மூலம் நம் பண்பாடு நிருபிக்கப்படுகிறது. அரிக்கமேடு மட்டுமில்லாமல் புதுச்சேரியை சுற்றி புராதன நகரங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தொண்டமாநத்தம், பண்டசோழநல்லுார், ஆரோவில் பகுதிகளில் கிடைக்கும் சான்றுகள் புதுச்சேரியின் பெருமையை எடுத்துக்காட்டுகின்றன' என்றார்.