தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'நீட்' அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பங்கள்... குவிகிறது:பி.டெக்., தொழில் படிப்புகளுக்கு மவுசு

'நீட்' அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பங்கள்... குவிகிறது:பி.டெக்., தொழில் படிப்புகளுக்கு மவுசு

'நீட்' அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பங்கள்... குவிகிறது:பி.டெக்., தொழில் படிப்புகளுக்கு மவுசு


ADDED : மே 23, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 04:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:நீட் அல்லாத சென்டாக் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. பதிவு செய்த 6,911 பேரில், 4,970 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து உயர்கல்வி வாய்ப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

சென்டாக்

நீட் அல்லாத இளநிலை தொழிற்படிப்புகள், கலை அறிவியல், வணிகவியல், நுண்கலை படிப்புகளுக்கான சென்டாக் ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 14ம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வரவேற்கப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுவரை 6,911 மாணவர்கள், சென்டாக் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இதில் 4,970 மாணவர்கள் தங்களது விண்ணப்பப் படி வங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 1,941 மாணவர்கள் இன்னும் விண்ணப்பப் பதிவை முழுமையாக முடிக்கா மல் வைத்துள்ளனர்.

பிராந்தியம் ரீதியாக இதுவரை 4,294 விண்ணப்பங்கள் புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 675 மாணவர்களும் இக்கல்வியாண்டில் புதுச்சேரியில் பயில ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனர்.

என்.ஆர்.ஐ., வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே வந்துள்ளது. எப்.என். எனும் வெளிநாட்டு குடிமக்கள், பி.ஐ.ஓ., எனும் இந்திய வம்சாவளியினர் போன்ற பிற பிரிவுகளில் தற்போதைக்கு விண்ணப்பங்கள் எதுவும் பதிவாகவில்லை.

பொறியியல், சட்டம், விவசாயம் போன்ற தொழில்முறை படிப்புகளை மட்டுமே பயில வேண்டும் என்ற நோக்கில் 2,211 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது அனைத்து பிரிவுகளையும் விட மிக அதிகம்.

அடுத்ததாக, கலை அறிவியல் மற்றும் தொழில்முறை படிப்புகள் ஆகிய இரண்டுக்குமே சேர்த்து 1,705 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கலை மற்றும் அறிவியல் படிப்புகளை மட்டும் படிக்க விரும்பி 1,054 மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

கடுமையான போட்டி

இந்த ஆண்டும் வழக்கம் போல பொறியியல் படிப்பிற்கே பி.டெக்., முதலிடம் கிடைத்துள்ளது. மொத்தம் 2,575 மாணவர்கள் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்ய இதுவரை விண்ணப்பித்துள்ளனர். மேலும், அகில இந்திய அளவிலான ஜே.இ.இ., தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை பெற 779 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியலுக்கு அடுத்தபடியாக, மருத்துவத் துறை சார்ந்த பிற அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கு 1,687 மாணவர்களும், பார்மசி படிப்பிற்கு 1,511 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

இதர படிப்புகளைப் பொறுத்தவரை, வேளாண்மைத் துறைக்கு 718 விண்ணப்பங்களும், பல்வேறு டிப்ளமோ படிப்புகளுக்கு 493 விண்ணப்பங்களும், சட்டப் படிப்பிற்கு 467 விண்ணப்பங்களும் வந்துள்ளன.

துணை மருத்துவப் படிப்பான டி.ஏ.என்.எம்., படிப்பிற்கு 291 மாணவர்களும், தொழில்சார் கல்விப் படிப்பான பி.வோக்-கு 270 மாணவர்களும் தங்களின் விருப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.

சிறப்பு இடஒதுக்கீடு

அதிகபட்சமாக கிராமப்புற மாணவர்களுக்கான சலுகையின் கீழ் 260 மாணவர்களும், பிராந்திய அளவிலான இட ஒதுக்கீட்டின் கீழ் 244 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 191 மாணவர்களும், தியாகிகளின் வாரிசுகள் பிரிவில் 35 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 14 மாணவர்களும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 விண்ணப்பங்களும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 5 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இது தவிர விவசாயிகளின் வாரிசுகள் பிரிவில் 4 பேரும், கிராமப்புற விரிவாக்கப் பணியாளர்களின் பிள்ளைகள் பிரிவில் ஒருவரும் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளை பொறுத்தவரை பி.டெக்., பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவத் துறை சார்ந்த பிற இளநிலை அறிவியல் படிப்புகளுக்கே மாணவர்களிடையே அதிக மவுசு உள்ளது. நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், சென்டாக் இணையம் வழியாக வரும் 29ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தற்போதைக்கு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய இன்னும் கால அவகாசம் இருப்பதால், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணம் எவ்வளவு


நீட் அல்லாத தொழில்முறை டிகிரி, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல், வணிகவியல், நுண் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு 150 ரூபாய், இதர பிரிவினருக்கு 300 ரூபாய்,
பிற மாநில மாணவர்களுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். தொழில்முறை டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புளுக்கு சேர்த்து விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., மற்றும் ஓ.சி.ஐ., ஸ்பான்சர்டு பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் அனைத்தும் நெட் பேக்கிங், டெபிட் கார்டு, கிரடிட் காடு, யுபிஐ., உள்ளிட்ட ஆன்லைன் வழிகளில் மட்டுமே செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us