/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடைகளின் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய கும்பல்... அட்டூழியம்: கை கட்டி வேடிக்கை பார்த்த போலீசாரால் வியாபாரிகள் அதிர்ச்சி
/
கடைகளின் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய கும்பல்... அட்டூழியம்: கை கட்டி வேடிக்கை பார்த்த போலீசாரால் வியாபாரிகள் அதிர்ச்சி
கடைகளின் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய கும்பல்... அட்டூழியம்: கை கட்டி வேடிக்கை பார்த்த போலீசாரால் வியாபாரிகள் அதிர்ச்சி
கடைகளின் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய கும்பல்... அட்டூழியம்: கை கட்டி வேடிக்கை பார்த்த போலீசாரால் வியாபாரிகள் அதிர்ச்சி
ADDED : செப் 12, 2025 03:49 AM

புதுச்சேரி: 'தமிழை வளர்க்கிறோம்...' என சொல்லிக் கொண்டு, கடைகளின் பெயர் பலகைகளை ஒரு கும்பல் நேற்று அடித்து நொறுக்கியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அட்டூழியத்தை போலீசார் கை கட்டி வேடிக்கை பார்த்ததற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. புதுச்சேரியில், தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளை அடித்து நொறுக்கும் அராஜகத்தை, தமிழ் உரிமை என்ற பெயரில் ஒரு கும்பல் கோரிமேட்டில் அண்மையில் அரங்கேற்றியது. அடுத்ததாக, இந்த கும்பல் நகர பகுதியில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளை முற்றுகையிட்டு, பல லட்ச ரூபாய் செலவில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளை அடித்து நொறுக்கும் வேலையை துவக்கி உள்ளது.
பெயர் பலகை துாள்... துாள்... இதன் உச்சக்கட்டமாக, காமராஜர் சாலையில் உள்ள பிரபல கடைகளின் டிஜிட்டல் பெயர் பலகையை வரிசையாக நேற்று அடித்து நொறுக்கினர். அதுவும், போலீசாரின் கண் எதிரிலேயே அத்துமீறி கடைகளின் பெயர் பலகைகள் தடியால் சரமாரியாக உடைத்து நொறுக்கப்பட்டது அராஜகத்தின் எல்லையை தொடுவதாக இருந்தது.
சொத்துகளை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டிய போலீசார் கை கட்டி வேடிக்கை பார்க்க, கண்ணாடிகள் நொறுங்கி வாசலில் விழுந்ததால், கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த பொதுமக்களும், ஊழியர்களும் பயத்தில் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பீதியில் உறைந்து அங்கிருந்து தலைதெறிக்க பறந்தனர்.
தமிழ் தான் நம்முடைய அடையாளம்; தமிழே நமது பெருமை; தாய் மொழி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. அதற்காக, சட்டப்படி அனுமதி பெற்று போராட்டம் நடத்தலாம். ஆங்கிலத்தில் பெயர் பலகை கூடாது என வலியுறுத்தலாம். இதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆனால், சட்டத்தை கையில் எடுத்து கொண்டு, கடைகளின் பெயர் பலகையை தடிகளால் அடித்து நொறுக்குவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோல, வன்முறையை அரங்கேற்றினால் புதுச்சேரியில் தமிழ் வளர்ந்து விடுமா? என்பதே அனைவரின் கேள்வியாகும்.
போராளிகளின் பிள்ளைகள் படிப்பது எங்கே? தமிழ் இல்லை என்று பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய கும்பலை சேர்ந்த போராளிகளின் பிள்ளைகள் எங்கே படிக்கின்றனர்? அரசு நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வியிலா படிக்கின்றனர்? பலரது பிள்ளைகள் படிக்கும் கான்வென்ட் பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கின்றனர். அந்த பள்ளிகளுக்கு முன் இவர்கள் போராட்டம் நடத்துவார்களா?
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு ஏராளமான வெளிநாட்டினரும், வெளிமாநில சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த, அவர்களுடைய மாநில உடையணிந்து வருகின்றனர். தமிழ்... தமிழ்... என்று சொல்லி அராஜகத்தை அரங்கேற்றுபவர்கள், தமிழ் கலாசாரத்தின்படி ஆடை (பாவாடை, தாவணி) அணிந்து வரவில்லை என்று புதுச்சேரிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளை 'கேரோ' செய்வார்களா?
புதுச்சேரியில் ஏராளமான வெளிநாடு, வெளிமாநில உணவகங்கள் செயல்படுகின்றன. பாஸ்ட்புட் ஹோட்டல்கள், தள்ளுவண்டி உணவகங்களும் வந்து விட்டன. அங்கெல்லாம் சென்று, 'நமது தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை ஏன் விற்கவில்லை என்று போராட்டம் நடத்துவார்களா?
தமிழில் அரசாணை வெளியிடுவது எப்போது? புதுச்சேரியில் தமிழை வளர்ப்பதற்காக மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் அரசால் துவக்கப்பட்டது. இங்கு வெளிநாட்டினருக்கு தமிழ் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழில் ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்பட்டது. ஆனால், இன்றைக்கு இந்த நிறுவனத்தில் ஒரு பேராசிரியர்கூட இல்லை. அரசு கவனிக்காததால், மூடுவிழாவை நோக்கி தள்ளாடி கொண்டுள்ளது. தமிழுக்காக ஆவேச குரல் கொடுப்பவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பாமல் எங்கே போனார்கள்?
புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகத்திற்கு ேபாதுமான நிதி ஒதுக்கவில்லை. அலுவலகம்கூட சரியாக அமைத்து தரப்படவில்லை. மிக குறுகிய இடத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கி வருகிறது. பணியாளர்கள் கூட இல்லாமல் ஒரு கம்ப்யூட்டருடன் பெயரளவில் உள்ளது. இதற்காக, தமிழ் போராளிகள் போராட்டம் நடத்தாமல் இருப்பது ஏன்?
தமிழகத்தில் எந்த ஒரு அரசாணையாக இருந்தாலும் அழகு தமிழில் வெளியிடுகின்றனர். ஆனால் புதுச்சேரியில் தலைமைச் செயலகத்தில் பிறப்பிக்கப்படும் எந்த ஆணையும் ஆங்கிலத்தில் தான் வெளியாகிறது. இதை கண்டித்து அரசுக்கு எதிராக போராளிகள் போராட்டம் நடத்ததாது ஏன்?
தாய் மொழி தமிழை வளர்க்க ஆக்கப்பூர்வமான பணிகள் எத்தனையோ இருக்க, அவற்றில் எதனையும் செய்யாமல், கடைகளின் பெயர் பலகைகளை மட்டும் அடித்து நொறுக்குவது ஏன்? அராஜக கும்பலின் உண்மையான உள்நோக்கம் என்ன?
அச்சத்தில் மக்கள் உறக்கம் கலையுமா? இந்த அயோக்கியத்தனம் கண் முன்னே நடந்தும் கூட போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. புதுச்சேரி அரசு துாங்கிக் கொண்டு இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.