ADDED : மே 24, 2026 11:23 PM
பாகூர்: பாகூர் போலீஸ் நிலையம் சார்பில், இளைஞர்களுக்கு இடையே வாலிபால் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தால், இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தி போலீசார் பரிசுகளை வழங்கி அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர். அதன்படி, பாகூர் போலீஸ் நிலையம் சார்பில், அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில், இளைஞர்களுக்கான வாலிபால் போட்டி நடத்தப்பட்டது.
இதில், பாகூரை சேர்ந்த 10 அணிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், ஆடிட்டர் அணி முதல் இடத்தையும், தாஸ் பிரதர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு புதுச்சேரி போலீஸ் தெற்கு பகுதி எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை, பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
