சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாமில் பொது மக்கள் திடீர் போராட்டம்
சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாமில் பொது மக்கள் திடீர் போராட்டம்
ADDED : மே 23, 2026 07:52 PM
பாகூர்: பாகூரில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாமில், வருவாய் ஆய்வாளர் இல்லாத நிலையில், பொது மக்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் மற்றும் இதர படிப்புகளுக்கு 2026–27ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கு, தேவையான சாதி, குடியிருப்பு, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற வேண்டி மாணவர்கள், பெற்றோர்கள் அந்தந்த தாலுகா அலுவலங்கங்களில் குவிந்து வருகின்றனர்.
ஆனால், வருவாய் துறை அதிகாரிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு சென்றதால், சான்றிதழ் வழங்கும் பணி பாதித்தது. இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், பாகூர், வில்லியனுார் தாலுகாவில் 23, 24 ஆகிய தேதிகளில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று பாகூர் தாலுகா அலுவலகத்தில், சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
பாகூர் வடக்கு வீதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க பொது மக்கள் சென்றனர். நீண்ட நேரம் காத்திருந்தும் வருவாய் ஆய்வாளர் பணிக்கு வராததால், ஒரு கட்டத்தில், பொறுமை இழந்த அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், கொம்யூன் செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்று, சிறப்பு முகாம் என்ற பெயரில் மாணவர்களையும், பெற்றோர்களை அலைக்கழித்து வருவதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பின், பாகூர் தாசில்தாரை சந்தித்து பிரச்சனை குறித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வருவாய் ஆய்வாளர் வரவழைக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கும் பணி நடந்தது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
