ADDED : மே 14, 2026 06:53 PM
புதுச்சேரி: பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த அரசு பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்த குப்புசாமி மகன் ஜீவகாந்த், 16; உழவர்கரை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது தந்தை 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் உறவினர் வீட்டில் தங்கி, படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ஜீவகாந்த் உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. தேர்வு முடிவு குறித்து தெரிந்து கொள்ள அவரது உறவினர் மொபைல் மூலம் அவரை தொடர்பு கொண்டார். அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து மாலை 5 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் அறையில் உள்ள சீலிங் பேனில் அவர் துாக்கில் தொங்கினார்.
அதிர்ச்சியடைந்த அவர், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து ஜீவகாந்த் இறந்ததை உறுதி செய்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
