தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.7.46 கோடி விடுவிப்பு
தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.7.46 கோடி விடுவிப்பு
ADDED : ஜூன் 06, 2026 11:34 PM
புதுச்சேரி: புதுச்சேரி, சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியம் மற்றும் கவுரவத் தொகை வழங்க ரூ.7.46 கோடியை விடுவித்து தேர்தல் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் மற்றும் ஒருமுறை கவுரவத் தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணையை தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் முழுநேர அடிப்படையில் ஈடுபட்டு, குறைந்தபட்சம் 81 நாட்கள் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்துக்கு இணையான சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறுகிய கால தேர்தல் பணிகளில் ஈடுபட்ட துறை அதிகாரிகள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தபால் ஓட்டு குழுவினர், , கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் கவுரவத் தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.7 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரத்து 873 செலவினத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் முதல் தவணையாக ரூ.7 கோடியே 8 லட்சத்து 62 ஆயிரத்து 813ம், இரண்டாம் தவணையாக ரூ.38 லட்சத்து 18 ஆயிரத்து 60 வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை தேர்தல் துறை மூலம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மின்னணு பரிமாற்றம் மூலம் செலுத்தப்பட உள்ளது.
