ஏனாமில் சமுதாய கல்லுாரி அமைப்பு பூர்வாங்கப் பணிகள் தீவிரம்
ஏனாமில் சமுதாய கல்லுாரி அமைப்பு பூர்வாங்கப் பணிகள் தீவிரம்
ADDED : ஜூன் 05, 2026 11:04 PM
புதுச்சேரி: ஏனாம் பிராந்தியத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லுாரி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் துவங்கியுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஏனாமில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ், புதுச்சேரி பல்கலைக்கழகத் துணை வேந்தர் பிரகாஷ் பாபு மற்றும் ஏனாம் மண்டல நிர்வாகி சிவராஜ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஏனாம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை எளிதில் வழங்கும் நோக்கில் இச்சமுதாயக் கல்லுாரி அமையவுள்ளது. குறிப்பாக, வேலைவாய்ப்புகளை அள்ளித்தரக்கூடிய திறன் சார்ந்த புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ், துணைவேந்தர் பிரகாஷ் பாபு ஆகியோர் கல்லுாரி அமைய பரிந்துரைக்கப்பட்ட புதிய கட்டட இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
ஏனாம் மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பெரிதும் உதவும் என, கூட்டத்தில் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். ஏனாமில் சமுதாயக் கல்லுாரி விரைவில் செயல்பாட்டுக்கு வருவதற்கான அடுத்தகட்டப் பணிகள் மிக விரைவாக முடுக்கிவிடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
