ADDED : ஜூன் 13, 2026 07:54 PM
புதுச்சேரி: திருகக்கனுார் போலீஸ் சார்பில், வம்புப்பட்டில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கி, பேசுகையில், ‘பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்சோ சட்டம் குறித்தும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் மொபைல் போன் தருவதை தவிர்ப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.
இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது, இளைஞர்கள் யாரேனும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தற்போது அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், இப்பகுதி இளைஞர்கள் மற்றும் பெண்கள் நன்றாக படித்து, போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று முன்னேற வேண்டும். அரசு வேலைக்கு சென்றால் தான் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முடியும்’ என்றார்.
தொடர்ந்து, கிராமத்தில் அரசு வேலைக்கு சென்றவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் போலீசார் முன்னிலையில் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். திரளான இளைஞர்கள், மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
