விளையாட்டுத் திடலா...விபத்துத் திடலா... பாரதி பூங்காவில் அச்சுறுத்தும் சீ–சா விளையாட்டு
விளையாட்டுத் திடலா...விபத்துத் திடலா... பாரதி பூங்காவில் அச்சுறுத்தும் சீ–சா விளையாட்டு
ADDED : ஜூன் 17, 2026 06:32 PM

புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளங்களின் ஒன்று பாரதி பூங்கா. பல தலைமுறைகளாகப் மக்களின் மாலை நேரங்களை அழகாக்கும் இடமாக இருக்கிறது. ஆனால், இன்று அதே பூங்கா குதுாகலத்துடன் ஓடி வரும் குழந்தைகளை அழ வைக்கும் இடமாக மாறி வருகிறது.
பூங்காவின் விளையாட்டு திடல் பகுதி இருக்கும் இரண்டு சீசாக்களும் இப்போது ஆபத்தின் மறுபெயராக மாறி இருப்பதே இதற்கு முக்கிய காரணம். ஒரு பக்கம் உடைந்த நிலையில், கூர்மையாக துருப்பிடித்த அந்த இரும்பு விளிம்புகள், குழந்தைகளின் மென்மையான தோலைப் பதம் பார்த்து வருகின்றன.
சீசா விளையாட்டில் ஏறி அமரும் குழந்தை, அந்த கூர்மையான பகுதியில் படும்போது, ஆடைகள் கிழிவது ஒருபுறம் இருக்க, காயங்கள் ஏற்பட்டு கண்ணீர் விடுகிறார்கள். விளையாட வந்த இடத்தில், பிஞ்சு குழந்தைகள் ரத்தக் காயங்களோடு மருத்துவமனைக்கு ஓடுகின்றனர்.
நாங்க குழந்தைகளை விளையாடத் தானே கூட்டி வர்றோம்; ஆபத்தை விலை கொடுத்து வாங்கவா வருகிறோம் என்பதுதான் பூங்காவிற்கு வரும் ஒவ்வொரு பெற்றோரின் ஆதங்கமும், கொந்தளிப்பாகவும் இருக்கிறது.
பொதுமக்கள் கூறுகையில், பூங்காவிற்கு என்று தனி நிர்வாகம் இருக்கிறது. பராமரிப்புக்கென்று நிதி ஒதுக்கப்படுகிறது. அப்படியிருக்க, கண்ணெதிரே ஆபத்தாக நிற்கும் அந்த சீசாக்கள் கூடவா அதிகாரிகளின் கண்களுக்குத் தெரியவில்லை. ஒரு சாதாரணப் பொதுமக்களாகிய நாம் புகார் கொடுத்தால், பார்த்துக்கொள்கிறோம் என்கின்றனர்.
ஆனால், ஒரு குழந்தை கீழே விழுந்து ரத்தம் சிந்தி, மருத்துவமனைக்குச் செல்லும் வரைக்கும் இவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.. உடைந்த இரும்பைத் துாக்கி எறியவோ, அல்லது புதியதை வைக்கவோ என்ன பெரிய அறிவியல் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது என, மன குமுறலுடன் கேள்வி எழுப்பியப்படி அடிப்பட்ட குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ஒரு பொது இடத்தில், அதுவும் குழந்தைகள் விளையாடும் பகுதியில் இவ்வளவு அலட்சியம் தேவையா... பாரதி பூங்காவில் உடைந்துபோய் ஆபத்தான நிலையில் உள்ள சீசாக்களை உடனடியாக புதுச்சேரி நகராட்சி அகற்ற வேண்டும்.
புதிய கருவிகளைப் பொருத்துவதுடன், பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க வேண்டும்.
